பதிவு செய்த நாள்
13
பிப்
2013
11:02
கும்பகோணம்: நாச்சியார்கோவில் வீரமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும், 20ம் தேதி நடப்பதால், 18ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி, திருப்பணிக்குழு அமைத்து, கடந்த சில மாதங்களாக, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்தது. 27 அடி உயரமுள்ள ராஜகோபுரம் முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் தமிழ்முருகன் சிலை, சர்வ ஆகம விதிமுறைகளின்படி, தனி சன்னதி அமைத்து, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இப்படி சிறப்புகள் பெற்ற கோவிலில், வரும், 15ம் தேதி கணபதி ஹோமம் நடக்கிறது. 16ம் தேதி நவக்கிரக ஹோமம் நடக்கிறது. 17ம் தேதி வாஸ்துசாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 19ம் தேதி காலை, இரண்டாம் காலமும், மாலை, மூன்றாம் காலமும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 20ம் தேதி காலை, 7 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 11.15 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், பின் மூலஸ்தான வீரமாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. அன்று மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சண்முகம், இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் அரவிந்தன், திருப்பணிக்குழு உறுப்பினர்கள், பரம்பரை அறங்காவலர்கள், வணிக வைசிய குலத்தார்கள், ஊர்மக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் வடக்குதெரு வாசிகள் செய்து வருகின்றனர்.