ஆலம்பூண்டி சிறுமி மாயமான வழக்கு கணபதி ஹோமம் நடத்திய இன்ஸ்பெக்டர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2026 10:11
செஞ்சி; சிறுமி மாயமான வழக்கில் 40 நாட்களாகியும் தடயம் எதுவும் கிடைக்காத நிலையில், சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏற்பாட்டில் நடந்த கணபதி ஹோமம். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி கடந்த அக் 12ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து முதலில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இன்றுடன் 40 நாட்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே, சத்தியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். மேலும், விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் நேற்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இந்த ஹோமத்தில் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 2 மணிநேரம் நடந்த இந்த பூஜை மாவட்ட உயர் அதிகாரிகளின் அனுமதியோடு நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறுமி மாயமான வழக்கில் 40 நாட்களாகியும் மர்மம் விலகாத நிலையில், போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த கணபதி ஹோமம் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.