இக்கோயிலில் நவ.,18ல் சாயராட்சை பூஜையில் காப்புக் கட்டுதலுடன் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று திருக்கார்த்திகையை ஒட்டி அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, 4:45 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலை 6:15 மணிக்கு ஏராளமான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோயில் வெளிப்பிரகார ஸ்தம்பத்தில் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., ரவிமனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல் திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடந்தது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வடபழநி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.