கோவில் திருப்பணி குறித்து கள ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை!
பதிவு செய்த நாள்
25
நவ 2026 04:11
பல்லடம்: கோவில் திருப்பணி குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, பல்லடம் அருகே, பணிக்கம்பட்டி கிராமத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., பொதுச் செயலாளர் அம்பிகா கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : பல்லடம், பணிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள வன்னிய குமாரசுவாமி கோவில், 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவிலாகும். பல்லடம் சுற்றுவட்டார பகுதியில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி, அழகுமலை முத்துக்குமாரசுவாமி, பல்லடம் பாலகண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இவ்வாறு, பழமை வாய்ந்த கோவில்களில் வன்னிய குமாரசுவாமி கோவிலும் ஒன்றாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான, 9 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலமும் உள்ளது. கடந்த, 10 ஆண்டுக்கு முன் பழைய கோவில் கட்டுமானங்கள் இடித்த அகற்றப்பட்டு, புதிய கோவில் கட்டுமான பணி துவங்கியது. இக்கோவில் நிர்வாகம், அறங்காவலர் நியமனம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. கோவில் பணிகள் தொடர்பாக உரிய வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவதில்லை. செயல் அலுவலர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார். எனவே, வன்னிய குமாரசுவாமி கோவில் திருப்பணிகள் தொடர்பாகவும், கோவில் நிலங்கள், அனுமதி, நிதி ஆதாரங்கள், அறங்காவலர் நியமனம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கள ஆய்வு மற்றும் உரிய விசாரணை மேற்கொண்டு பக்தர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டதற்கு, பனிக்கம்பட்டி வன்னிய குமாரசுவாமி கோவில் அறக்கட்டளையினரால் பராமரிக்கப்பட்டு வருவதால், கோவில் திருப்பணி உள்ளிட்ட விவகாரங்களை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றார்.
|