பல்லடம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முருகப்பெருமானின் அருளால், பக்தர்களின் நீண்டகால எண்ணம் நிறைவேறியது என, காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அழகன், முருகன், கார்த்திகேயன், காங்கேயன் என்ற பல்வேறு நாமங்களால் அழைக்கப்படும், தமிழ் கடவுள் ஆகிய முருகப்பெருமானின் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் உள்ளது. தீப ஒளி பிரகாசமாய் எறிந்தால் எவ்வாறு வெளிச்சம் கிடைக்கிறதோ அது போல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், பக்தர்களின் மனதில் தீப ஒளியானது பிரகாசமாக எரிந்து கொண்டுள்ளது. சூரபத்மனால் தேவர்களும், முனிவர்களும் படாத பாடுபட்டார்கள். இதற்காக, முருகப்பெருமான், சக்திவேலை பெற்று சூரபத்மனை வதம் செய்த பின், பக்தர்கள் எவ்வாறு மனம் குளிர்ந்தார்களோ அது போன்ற ஒரு நிகழ்வு தான் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு பல்வேறு சோதனைகள், இடையூறுகள் ஏற்பட்டன. இவற்றையெல்லாம் கடந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முருகப்பெருமானின் அருளால், பக்தர்களின் நீண்டகால எண்ணம் ஈடேறி உள்ளது. அதிலும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மடாதிபதிகள், துறவியர் மற்றும் ஹிந்து இயக்கத் தலைவர்கள் முன்னிலையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது இன்னும் சிறப்பு. பல ஆண்டுக்குப் பின் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இந்நாள் ஒரு பொன்நாளாகும்.