பதிவு செய்த நாள்
15
பிப்
2013
03:02
சிருங்கேரி சாரதாபீடத்தின் 35வது பீடாதிபதியாக அருள்பாலித்தவர் ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த சுவாமி. ஒருமுறை, இவர் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஓரிடத்தில் கார் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. சாலையில் சென்ற எல்லோருமே அதுபற்றிய பொறுப்பில்லாமல், அவ்விடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். வித்யாதீர்த்தர் வண்டியை நிறுத்தச் சொன்னார். கவிழ்ந்து கிடந்த கார் அருகே சென்ற போது, உள்ளே ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. காரைத் தூக்கினால் ஒழிய, உள்ளே கிடப்பவரை மீட்பது சிரமம் என்பதைப் புரிந்து கொண்ட தீர்த்தர், தன்னுடன் வந்த ஊழியர்களை அழைத்தார். அப்போது சுவாமிக்கு வயது 40 தான். கட்டுமஸ்தான உடலுடன் இருப்பார்.
ஊழியர்களை மட்டும் ஏவிவிடாமல், தானும் அவர்களுடன் சேர்ந்து முழு பலத்தையும் சேர்த்து எப்படியோ காரைத் தூக்கிவிட்டார். உள்ளே கிடந்த நபரை, தங்கள் கார் ஒன்றில் ஏற்றினார். அதற்கு முன்னதாக, மடத்து அதிகாரி ஒருவரை ஆம்புலன்ஸ் கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அனுப்பியிருந்தார். காரை ஆம்புலன்ஸ் வரும் ரோட்டிலேயே செல்லும்படி கூறினார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கக் கூடாது என்பது அவரது எண்ணம். அதன்படியே கார் புறப்பட, எதிரில் வந்த ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்து பிழைத்தும் விட்டார். தன் வாழ்நாளின் இறுதிவரை அவர் அடிக்கடி சுவாமியைத் தரிசிக்கச் சென்றார். மடாதிபதிகளாய் இருப்பவர்கள் அன்றைய தினம் அப்படி இருந்தார்கள். இவர்களைப் பார்த்து மனித நேயத்தை எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வேண்டாமே ஒலிபெருக்கி: ஒலிமாசு பற்றி இப்போது இருக்குமளவுக்கு விழிப்புணர்வு 1970 களில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோயம்புத்தூருக்கு சிருங்கேரி பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் வந்தார். பக்தர்களின் வேண்டுகோளுக்காக சொற்பொழிவாற்றினார். ஒரு மண்டபத்தில் பேச ஏற்பாடானது. ஆனால், ஒலிபெருக்கிகள் மண்டபத்துக்கு வெளியேயும் கட்டப்பட்டிருந்ததை சுவாமி கவனித்தார். நிர்வாகிகளை அழைத்து, சொற்பொழிவு கேட்க வேண்டுமென நினைப்பவர்கள் எல்லோரும் மண்டபத்துக்குள் இருக்கிறார்கள். வேறு ஏதோ பணியாக வந்தவர்களும், பொதுமக்களும்தான் மண்டபத்துக்கு வெளியே நிற்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பணியில், என் பேச்சை அவர்கள் பொருட்படுத்தப் போவதில்லை. ஒரு கல்யாண வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒலிபெருக்கி களின் தேவையற்ற சத்தத்தால், மணமக்கள் வாழ்த்து பெறுவதற்கு பதிலாக மக்களிடம் சாபத்தையே வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். அதுபோலத்தானே இதுவும்! எனவே, வெளியே இருக்கும் ஒலிபெருக்கிகளின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள், என்றார். உடனடியாக இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மக்களே! இனியாவது, உங்கள் இல்ல விழாக்களுக்கு உங்கள் எல்கைக்குள் மட்டும் கேட்கும் அளவுக்கு ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து கொள்வீர்களா!