பதிவு செய்த நாள்
15
பிப்
2013
03:02
ஆன்மிகம் வளர்க்கும் புண்ணிய பூமியான காஞ்சி மாநகர் பல்வேறு சிறப்புகள் கொண்டது. நகரங்களுள் சிறந்தது காஞ்சி என்கிற சொல் வழக்கே உண்டு. இப்படிப்பட்ட காஞ்சிபுரத்தை கல்வியில் கரையிலாக் காஞ்சிமாநகர் காஞ்சிப்பதி என்பது அருணகிரிநாதரின் வாக்கு. இவரது கூற்றுக்கு காந்தக் கல்லும் ஊசியும் போன்ற ஆசிரியரும் மாணவனும் ஒருவரோடு ஒருவர் மனம் ஒருமித்து நூல்களை ஆராய்ந்து தமிழை ஓதுகின்ற காஞ்சிப்பதி என்று பொருள்.
இப்படிக் கற்றார் தொழும் காஞ்சிபுரம் பஞ்சபூதத் தலங்களில் நிலம்(மண்) வடிவாகப் போற்றப்பெருகின்றது. இங்கு தொண்டை மண்டல வேளாளர் பெருமக்களுக்குத் தீட்சை அளிக்கும் குருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர் என்னும் பெரியவர் சிவபக்தியில் திளைத்த இவருக்கு இறைவன் திருவருளால் மகப்பேறு வாய்த்தது. அந்தக் குழந்தையின் முகத்தில் தோன்றிய அருட்பிரகாசத்தைக் கண்டு சிவப்பிரகாசம் என்று பெயரிட்டார் குமாரசாமி தேசிகர். பின்பு அவருக்கு வேலையர்,கருணைப்பிரகாசர் என மேலும் இரு மகன்களும், ஞானாம்பிகை என்ற மகளும் பிறந்தனர்.
சிவப்பிரகாசர் இளமையிலேயே கல்வியில் சிறந்தவராக விளங்கினார். சைவ சித்தாந்த நுட்பங்களை எளிதில் கற்றார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், தம்பியர் இருவருக்கும் தாமே குருவாக இருந்து இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தார். ஒருமுறை, உடன்பிறந்தோரை அழைத்துக்கொண்டு, அக்னி சொரூபமாக விளங்கும் அண்ணாமலையைத் தரிசிக்கச் சென்றார். அங்கே, தெற்குவீதியில் உள்ள திருமடத்தில் சாளிகந்த குருதேவர் என்னும் மகானைக் கண்டு வணங்கினார். மலையை வலம் வரும்போதே அண்ணாமலையாரின் அருட்பெருமைகளைப் போற்றி 100 பாடல்களைப் பாடினார். அதுவே சோணசைல மாலை(சோண சைலம் என்றால் அண்ணாமலை) எனும் அருட் பிரபந்தம். இதன் ஒவ்வோர் ஈற்றடியும் சோண சைலனே கயிலை நாயகனே என்று வருமாறு அமைந்திருப்பது சிறப்பு. அக்காலத்தில், திருநெல்வேலியில் சிந்துபூந்துறை எனும் இடத்தில் வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் அருளாளர் இலக்கணம் கற்பிப்பதில் புகழ்பெற்று விளங்கினார். சிவப்பிரகாசர் அவரிடம் சென்று, தமது இலக்கணப் பயிற்சியைத் தொடர விரும்பி, அவரை நேரில் சென்று தரிசித்தார். சிவப்பிரகாசரின் தமிழ்ப் புலமையை அறிவதற்காக ஒரு வெண்பா பாட வேண்டும் என்றும் அந்த வெண்பாவின் தொடக்கமும் இறுதியும் கு என்னும் சொல் வருமாறு பாடும்படி சொன்னார் வெள்ளியம்பலத் தம்பிரான்.
உடனே சிவப்பிரகாசர் ..
குடக்கோடு வான் எயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னம் அணிவாற்கு வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு
என்று பாடி முடித்தார். என்றும், வடக்கோடு தேருடையான் இதற்கு தென் திசையிலிருந்து வடக்கு நோக்கி வீசுகின்ற தென்றல் காற்றைத் தேராக உடையவன் என்று பொருள்) என்று மன்மதனையும் குறிப்பிட்டதன் மூலம் புதிய சொற்களைக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் அதுவரை யாரும் கூறாத ஒன்றைப் புதுமையாகப் படைத்தார். சிவப்பிரகாசர் பாடிய பாடலின் அருமையை வெள்ளியம்பலத் தம்பிரான் கேட்டு, மிகவும் மகிழ்ந்தார். தொடர்ந்து அவருக்கு ஐந்திலக்கண நுட்பங்களைப் போதித்தார்.
பெரம்பலூர் அருகே, துறைமங்கலம் என்ற ஊரில் இருந்த அண்ணாமலை ரெட்டியார் என்பவர் முன்பு ஒருமுறை சிவப் பிரகாசருக்கு 300 பொற்காசுகளை அன்பளிப்பாக அளித்திருந்தார். அதனை இப்போது குரு காணிக்கையாக வெள்ளியம்பலத் தம்பிரானுக்கு வழங்கினார் சிவப்பிரகாசர். ஆனால், தம்பிரானோ, இது நமக்கு வேண்டாம் திருச்செந்தூரில் ஒரு போலிப் புலவன் நம்மை இழிவுபடுத்துவதையே விரதமாகக் கொண்டு இருக்கிறான். அவனோடு வாதிட்டு, வென்று வருக! அதையே எமக்களிக்கும் குரு காணிக்கையாக ஏற்றுக்கொள்வேன் என்றார்.
அதைக் கேட்ட சிவப்பிரகாசர், உடனே திருச்செந்தூர் சென்றார் அங்கே செந்திலாண்டவனை வணங்கி வரும்போது, வசைபாடும் புலவர் எதிர்ப்பட்டார். சிவப்பிரகாசரை யார் என்று வினவினார். அந்தப் புலவர் யாம் வெள்ளியம்பலத் தம்பிரானின் அடிப்புழுதி என்றார் சிவப் பிரகாசர். உடனே அந்தப் புலவர், அந்தப் புழுதி என் புலமைக் காற்றில் பறந்துபோய்விடும்! என்றார் கேலியாக, சிவப்பிரகாசரும் அதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.
அடிக்கீழ் உள்ள புழுதி காற்றில் பறப்பது உண்டோ? என்று பதில் கூறி அவரை விவாதத்துக்கு அழைத்தார். அந்தப் புலவரை வெற்றி கொள்ள, புதுமையான புலமைப் போட்டி ஒன்றைக் கூறினார். யாம் நிரோஷ்டக யமகம் பாடுவோம். யார் முதலில் பாடி முடிக்கின்றாரோ, அவரே வென்றவர் அவருக்குத் தோற்றவர் அடிமை! என நிபந்தனை விதித்தார். சிவப்பிரகாசரை எளிதில் அடிமையாக்கிவிடலாம் என இறுமாந்திருந்தார் வசைப் புலவர். சிவப்பிரகாசர் திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி நிரோஷ்டயமக அந்தாதிப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். நிரோஷ்டகம் என்பது உதடுகள் ஒட்டாமல் பாடுவது. பகரம் மகரம் கலவாது பாடினால். அது நிரோஷ்டகப் பாடலாகும். இது மிறைக்கவி எனும் வகையைச் சேர்ந்தது. சிவப்பிரகாசர் பாடிய இந்த வகைப் பாடலின் முதல் பாடல் இதோ..
யானைக்கண் டங்கரி சென்றேத் தெழில் செந்தில் இன்றடைந்தே
யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை ஏய்ந்த தகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி எய்தினனே
போட்டிப் புலவர் தொடங்கும் முன்பே, செந்தில் ஆண்டவன் அருளால் முப்பது செய்யுட்களையும் பாடி முடித்து விட்டார் சிவப்பிரகாசர். இந்த நூலே செந்தில் நிரோஷ்டக யமக அந்தாதி. போட்டிப் புலவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, இன்றுமுதல் யான் தங்களுக்கு அடிமை என்றார். அடிபணிந்த புலவரை அழைத்துக்கொண்டு சிந்துபூந்துறை வந்து, தம் குரு வெள்ளியம்பலவாணத் தம்பிரான் காலில் அவரை அடிபணியச் செய்தார் சிவப்பிரகாசர். இந்தச் சம்பவத்தின் மூலம் அந்தப் புலவரின் கர்வம் அடங்கியது.
தொடர்ந்து, சிவப்பிரகாசர் தம் குருவிடம் விடைபெற்று, மீண்டும் துறைமங்கலம் வந்துசேர்ந்தார் அவரது விருப்பப்படி அங்கே ஒரு மடம் கட்டித் தந்து, அதில் தங்கியிருந்து ஞானநெறி நீதி நூல்களை இயற்றியருள வேண்டினார் அண்ணாமலை ரெட்டியார். அவ்வாறே சிவப்பிரகாசரும் திருவெங்கைநகர் பெயரில் உலா, கோவை, கலம்பகம் அலங்காரம் முதலான சிறந்த இலக்கியங்களை இயற்றினார்.
சிவப்பிரகாசருக்குத் திருமணம் செய்துகொள்வதில் ஈடுபாடு இல்லாததால், தமது தம்பியர் மற்றும் தங்கையின் திருமணத்தை நல்ல முறையில் முடித்துவைத்தார். சிதம்பரத்தில் நடராஜப் பெருமானை வணங்கி சதமணி மாலை, நால்வர் நான்மணி மாலை போன்ற நூல்களைப் பாடினார். காஞ்சியில் தங்கி இருந்த காலத்தில் வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை போன்ற அற்புத நூல்களை இயற்றியருளினார். சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல்கள் மொத்தம் 34
தமது 32 ஆம் வயதில் இறையருளில் கலந்த சிவப்பிரகாசரை கற்பனைக் களஞ்சியம் கவிசார்மபவுமர் என்று புலவர் உலகம் போற்றுகிறது.
புனைஎழில் வடிவினாள் ஓர் பொது மகள் கண்ட மைந்தர்
மனமெனப் புலவர் நெஞ்சம் அருளும் இன்தமிழ்ப் பாமாலை
சினவிடை யவற்கே சாத்தும் சிவப்பிர காச தேவன்
முனைவன் எம் அடிகள் பாத முளரிகள் சென்னி சேர்ப்பாம்!