Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
15:10

அகத்தியர் தமிழ் வளர்த்த பொதிகைமலையில் உற்பத்தியாகி வளம் செழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த அழகான நகரம் திருநெல்வேலி. பல அருளாளர்களைத் தந்த புண்ணிய பூமி இது. இங்கே 28.11. 1839-ல் (விகாரி-கார்த்திகை 16-ஆம் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் ஒரு தவக்குழந்தை அவதரித்தது. செந்தில்நாயகம் பிள்ளை முத்தம்மை தம்பதியர் பல ஆண்டுகள் தவமாய் தவமிருந்து பெற்ற அந்தக் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிட்டு வளர்த்தனர். 9 வயதுக்குள் கல்வியில் சிறந்து விளங்கினான், குழந்தை சங்கரலிங்கம் சுரண்டை என்னும் ஊரில் கோயில்கொண்டுள்ள பூமிகாத்தாள் எனும் அம்பிகையின் பெயரில் அக்குழந்தை முதன்முதலாக ஒரு வெண்பா பாடியது.

தேவாமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்த.... அதைக்கண்ட பார்வதிதேவி அவரது கழுத்தில் கைவைத்து விஷம் கீழிறங்காமல் காத்தாள். அதன் மூலம் ஈசனது சொரூபமான உலகை அழிவிலிருந்து அம்பிகை காத்ததால், அவளுக்கு பூமி காத்தாள் என்ற பெயர் ஏற்பட்டது என்கிற அருமையான விளக்கத்தை அந்தத் தெய்வக் குழந்தையின் பாடல் சுட்டிக்காட்டியது. இதனைக் கேட்ட அனைவரும் குழந்தையின் ஞானத்தைக் கண்டு அதிசயித்தனர். சங்கரலிங்கத்தின் குருவான சீதாராம நாயுடு என்பவர், அவருக்கு விநாயகர், லட்சுமி, முருகப்பெருமான், ஷடக்ஷரம் ஆகிய மந்திரங்களை உபதேசித்தார். அதன் தொடர்ச்சியாக தினமும் வேல் வழிபாடு செய்து, முருகக்கடவுளைப் போற்றும் அருமையான செந்தமிழ்ப் பாடல்களை இயற்றி, அவற்றை ஏட்டில் எழுதி வரலானார் சங்கரலிங்கம், அதோடு, தவசிக்கோலம் பூண்டு கையில் தண்டு, கமண்டலம் தாங்கி நடந்தே பல தலங்களுக்குச் சென்று தெய்விகப் பாடல்களை பல பாடினார். மக்களிடையே பக்திநெறியை வளர்த்தார். இவரது தோற்றத்தைக் கண்டு, தண்டபாணித் தொண்டர் தண்டபாணி சுவாமிகள் முருகதாசர் என்றெல்லாம் மக்கள் அழைக்கலாயினர்.

இனி நாமும் அவரை தண்டபாணி சுவாமிகள் என்றே அழைப்போம்.... மக்கள் மத்தியில் கந்தவேளின் அடியாராக தண்டபாணி சுவாமிகள் வலம் வந்த காலத்தில் சுந்தரத்தம்மை என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். மயிலம் கோயில் முருகப்பெருமான் சந்நிதியில் கந்தவேள் ஆணையிட்டபடி ருத்ராட்சம் அணிவித்து அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார். பழநிக்கு பலமுறை சென்று, அங்கே அருள்மழை பொழியும் தண்டாயுதபாணி சந்நிதியில் பலமுறை வீழ்ந்து வணங்கி சந்தக்கவி பாடத் தொடங்கினார். அந்த அற்புத நூல், ஆயிரம் பாடல்களைக் கொண்ட பழநித் திருவாயிரம். பிறகு, பழநியில் ஓர் ஆஸ்ரமம் நிறுவி, அங்கேயே தங்கி சக்தி வடிவேல் வழிபாடு செய்து வரலானார் தண்டபாணி சுவாமிகள். இவரது எழுத்தாணியான சர்வசாதாரணி கொண்டு எழுதத் தொடங்கினால்... இவர் மனம் செல்லும் வேகத்துக்கு எழுத்தாணியால் எழுத இயலாது. பாடல்கள் அருவிப் பிரவாகம் போல் வேகமாக பெருக்கெடுத்து ஓடும். தில்லை நடராஜர் மீது தில்லை திருவாயிரம், சூரியன் மீது ஞாயிறு ஆயிரம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய சஹஸ்ர தீபம் திருவிளக்காயிரம்).தெய்வத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருவாமாத்தூர் பதிகசதகம், சதகப் பதிகம் முதலியன இவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை. இவர் தமது பாடல்களில், முற்பிறவியில் தாம் அருணகிரிநாதராகப் பிறந்தவர் என்றும், இதை முருகப்பெருமானே தம்மிடம் பலமுறை கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.

ஒருமுறை தென்காசி அருகிலுள்ள திருமலை (பைம்பொழில்) குமாரசாமி கோயில் திருச்சந்நிதியில் நின்று முருகப்பெருமான் புகழைப் பாடிப் பரவினார். அப்போது, அருணகிரிநாதருக்கு குருவாய் எழுந்தருளி காட்சியளித்தது போன்று தம்மையும் ஆட்கொள்ள வேண்டும் என்று பணிந்து பலமுறை வேண்டினார். ஆனால் இறையருள் கிடைக்காததால் இனி உயிருடன் இருந்து பயனில்லை என்று தீர்மானித்து மலையிலிருந்து விழுந்து புரண்டார். அப்போது திருமலைக் கந்தன் அவர் உணராதவாறு அவரைக் கையில் ஏந்தி மலையடிவாரத்தில் கொண்டு சேர்த்தார்.

தேவார மூவர், அருணகிரிநாதருக்குப் பிறகு அதிகமான ஸ்தல வழிபாடு செய்து, பதிகங்கள் பல பாடிய பெருமை தண்டபாணி சுவாமிகளுக்கே உண்டு. அவற்றில் ஸ்தல வழிபாடு செய்து, பதிகங்கள் பல பாடிய பெருமை தண்டபாணி சுவாமிகளுக்கே உண்டு. அவற்றில் 222 தலப் பாடல்கள் அடங்கும். ஒரு தலத்துக்குச் சென்றால் அந்த ஊரில் கோயில்கொண்டுள்ள எல்லா தெய்வங்களையும் பாடும் நெறிகொண்டவர் தண்டபாணி சுவாமிகள், முருகப்பெருமானுடன் விநாயகர், சிவன், அம்பிகை, திருமால், சூரியன் மற்றும் கிராம தெய்வங்கள் என அனைவரையும் சமயாதீத நிலையில் பாடும் அருளாளர் அவர். ஒரு லட்சம் பாடல்களுக்கும் மேல் கவி புனைந்துள்ள இவர், முருகப்பெருமான் மீது ஊடல் கொண்டு கடலிலும், தீயிலும் எறிந்தது போக தற்போது உள்ளவை 49, 722 பாடல்களே! இவை பாதிக்கு மேல் அச்சில் வராமல் சுவடியிலேயே உள்ளன. இந்தச் சுவடிகள் தற்போது கோவை சரவணப்பட்டி கவுமார மடாலயப் பாதுகாப்பில் உள்ளன.

புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக் கண்டித்தவர் தண்டபாணி சுவாமிகள். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி ஆங்கிலேயர் அந்தாதி என்னும் சமுதாய சிந்தனை நூலை (100 பாடல்கள் கொண்டது)யும் பாடியவர் இவர். மருத்துவத்தைப் பற்றி விளக்கும் வாகடப் பிள்ளைத்தமிழ் முசுகுந்த நாடகம் சித்திரக்கவி வகையில் மாலைமாற்று சதுரபந்தம் மற்றும் அறுவகை மதத்துக்குரிய எழுகூற்றிருக்கை, எட்டு, ஒன்பது தசாங்க (பத்து) கூற்றிருக்கை ஆகியவற்றை பாடியவர். இதில்... 8,9,10 ஆகியவற்றை இதுவரை தமிழ் இலக்கியத்தில் எவரும் பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருப்புகழ் சந்தப்பாக்களைப் பாடுவதிலும் மிகவும் வல்லவராக திகழ்ந்தார் தண்டபாணி சுவாமிகள், அதனால் இவரை வண்ணச்சரபம் என்று அழைப்பர். இவர் இயற்றிய வண்ணத்தியல்பு மற்றும் அறுவகை இலக்கணம் (786 சூத்திரங்கள்) ஆகியவை தமிழ்மொழிக்குப் புதிய அணிகலன்களாகும். தொல்காப்பியருக்குப் பிறகு வண்ணத்தில் ஈடுபாடு கொண்டு பாடியவரும் இலக்கணம் வகுத்தவரும் இவர் ஒருவரே!

அருணகிரியார் அருளிய கந்தரலங்காரம் போன்று, வேல் அலங்காரம், மயில் அலங்காரம், வீரவாகுத்தேவரின் வாள் ஆலங்காரம், முருகானந்த லஹரி மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆணைப்படி ÷க்ஷõடச நூல் (16 பிரபந்தம்-1838ங பாடல்கள்) முதலியன இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீதும் திருஎழு கூற்றிருக்கைப் பாடினார். அன்றிரவு பெருமாள் இவர் மனவெளியில் ஒரு வைணவ வயோதிகர் வடிவில் காட்சியளித்து, எழுகூற்றிருக்கைக்காக எழுநூறு பொன்தரக் கடமைப்பட்டிருக்கிறேன் என சீட்டெழுதி கையொப்பமிட்டுத் தந்ததைக் கண்டார். பெருமாளே! உமது திருவருள் இருந்தாலே போதுமே! எழுநூறு பொன்சீட்டு ஏன் அனுப்பினீர்? என்ற ஈற்றடி கொண்ட ஒரு பதிகமும் பாடிப் பெருமானின் அருமை பெருமைகளைப் போற்றி இன்புறுகிறார் இவர்.

வடலூர் ராமலிங்க சுவாமிகளை சந்தித்து அடிக்கடி அளவளாவுது தண்டபாணி சுவாமிகளின் வழக்கம். வளவனூர் ஷண்முக சுவாமிகள், யாழ்ப்பாணம் மஹாவித்வான் பிள்ளையவர்கள், வண்ணக் களஞ்சியம் நாகலிங்க முனிவர், திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அஷ்டாவதானம் கல்யாண சுந்தரம், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் போன்ற பெரியோர்கள் இவரது நண்பர்கள். தமிழ் எழுத்துக்கள் 247 ஒவ்வொன்றுக்கும் ஒரு குறள் வீதம் கொண்ட வருக்கக் குறள் என்ற நூலும், தமிழ் எழுத்துக்களில் இதழ் முயற்சியால் (உதடு)ஒட்டுதலும், குவிதலும் உண்டாகிற 119 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி உருவான பத்து பாடல்கள் கொண்ட குவிபா ஒருபது என்ற பதிகமும், தமிழ் அலங்காரம் என்ற நூலும் இவரது கவித்துவத்தையும் ஆற்றலையும் திறம்பட சுட்டிக்காட்டும் தமிழ் இலக்கணத்தில் இவர் பாடாத பா அமைப்பு எதுவுமே பாக்கியில்லை என்று கூறலாம்.

இவர் பாடியுள்ள புலவர் புராணம் 3,003 கவிகள் கொண்டு 72 புலவர்களது வரலாறுகளை விவரிக்கிறது. விழுப்புரம் அருகில் பசு பூஜித்த திருவாமாத்தூர் என்னும் திருத்தலத்தை தமது தவத்துக்கு ஏற்ற இடமாகக் கொண்டு எல்லைதாண்டா விரதத்துடன் வாழ்ந்தார். அந்தத் தலத்துக்கு புராணம், கலம்பகம் உள்ளிட்ட 3,482 பாடல்களைப் பாடியுள்ளார். அங்கு கவுமார மடம் ஒன்றை ஸ்தாபித்தார். கோவை ராமானந்த சுவாமிகளுக்கு தீட்சை அளித்தார். அங்கு கோவை சரவணப்பட்டியில் கவுமாரமடம் நிறுவியதும் இவரது ஞானவாழ்வில் முக்கியமான ஒன்று. ஆறெழுத்து மந்திரம் ஒரு கோடி ஜபித்து, தினசரி வேல் பூஜை செய்துவந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், 5.7.1898 அன்று (விளம்பி-ஆனி 23, திருவோண நட்சத்திரம்) முருகப்பெருமான் திருவருளில் கலந்தார். திருமால் கோயில் திருவிழா ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரத்தில் நிறைவு பெறுவது போல், தண்டபாணி சுவாமிகளும் ஹஸ்தத்தில் தோன்றி ஓணத்தில் அருட்சமாதி கொண்டார். முருகப்பெருமானையே பரம்பொருளாகக் கொண்டு வாழ்ந்த இவர், சைவ, வைணவ பேதமின்றி துளசிமணியும் ருத்ராட்சமும் சமமாக அணிந்து விபூதி, திருமண் விளங்கக் காட்சியளிப்பாராம்.

முருகப்பெருமானின் முகங்கள் ஆறும் ஆறு மதத்தைக் காட்டுவன. என்னும் தண்டபாணி சுவாமிகளின் பாடல் இதோ:

குருவும் கணபதியும் கொற்ற மழுவானும்
திருமடந்தைக் காவலனும் சேணில்- வருசுடரும்
தேவினத்தின் தாயான சிற்சக்தியும் முருகோன்
மூவிரண்டாக் காட்டும் முகம்.

முருகனருள் பெற்றரிய தமிழ்க்கவிதை
மழைபொழியும் முகல் இந் நாட்டில்
மருவுபல பதியுடைத் தினியதமிழ்ப்
பாவருளி மக்கள் போற்றப்
பெருமைபெறு மாமுனிவன் தண்டபா
ணிப்பெயர்கொள் பெம்மான் வண்ணச்
சரபமெனும் சிறப்புடைய திருமுருக
தாசர் செய்த தமிழ்தேன்போலும்.

என்று வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களால் புகழப்பட்ட வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள். திருநெல்வேலியில் 28-11-1839 அன்று (விகாரி வருடம் கார்த்திகை மாதம் 16ஆம் நாள்) சைவ வேளாளர் மரபில் செந்தில்நாயகம் பிள்ளைக்கும் அவரது நான்காவது மனைவியான பேச்சி முத்தம்மாளுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். திருநெல்வேலிக்கு அருகில் நெற்கட்டும் செவல் எனும் ஜமீன் கிராமத்தில் தானாதிபதியாக இருந்து வந்தார். செந்தில் நாயகம் பிள்ளை அவர்கள். குழந்தைக்கு பெற்றோர் இட்டபெயர் சங்கரலிங்கம் என்பதாகும். சங்கரன் கோயிலில் எழுந்தருளியுள்ள  சங்கர நாராயணர், அர்ச்சகர் வடிவில் வந்து இப்பெயரைச் சூட்டுமாறு கூறியதாகவும் அறிய முடிகிறது.

சிறுவன் சங்கரலிங்கம் ஆறு வயதாகியிருக்கும்போது தனது தந்தையை இழக்க நேரிடுகிறது. அதனால் கல்வியும் தடைபடுகிறது. சுரண்டை எனும் ஊரில் வசித்து வந்த அவனது பெரிய தந்தையார், சங்கரலிங்கத்தின் அறிவாற்றலைக் கண்டு தம்மோடு அழைத்துச் சென்று சுரண்டையில் கல்வி பயில ஏற்பாடுகள் செய்தார். சித்திரா நதிக் கரையோரம் அமைந்துள்ளது பூமிகாத்தாள் அம்மன் கோயில், ஒருமுறை அக்கோயில் திருவிழாவிற்கு வந்த சிலருக்கு இந்த அம்மனுக்கு பூமிகாத்தாள் எனப்பெயர் ஏற்பட காரணம் என்ன? எனும் வினா எழுந்தது. பெரியவர்களுக்கே சரியாக விளக்கம் சொல்லத் தெரியாத வேளையில் அங்கே விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவன் சங்கரலிங்கம் பூமிகாத்தாள் எனும் பெயருக்கு விளக்கமளித்தான், அதுவும் வெண்பாவில்.

அமுதம் கடையும்நாள் ஆலம் வெடித்துத்
திமுதமெனத் தீயெரித்துச் சென்ற(து)- அமுதமெனத்
தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத்தைப்பிடித்துக்
சாத்ததனாற் பூமி காத்தாள்.

என்று நேரிசை வெண்பாவில் அமைந்த பாடல்மூலம் சங்கரலிங்கம் விளக்க கூறிய உடன் அங்கிருந்த மக்கட்கூட்டம் வியந்து பாராட்டி வாழ்த்தினர். அன்று முதல் பாடல்களைப் புனையத் தொடங்கிய சங்கரலிங்கம் பனை ஓலைகளில் அவற்றைப் பதிவு செய்து வந்தார். அகப்பொருளின் துறைகளை சந்தப் பாவில் எழுதப்பட்ட பாடல்கள் வண்ணம் என்ற பெயரி வழங்கப்பட்டது. சீடராகச் சேர்ந்த சங்கரலிங்கத்திற்கு விநாயக மந்திரம், லட்சுமி மந்திரம், ஆறெழுத்து மந்திரம் போன்ற மந்திரங்களை உபதேசம் செய்தார் சீதாராம நாயுடு. மடைதிறந்த வெள்ளம் போலப் பாடும் திறன் படைத்துள்ள சங்கரலிங்கத்தின் ஆற்றலைக் கண்ட ஆசிரியர் சீதாராம நாயுடு அவரை ‘ஒயாமாரி’ என்று அழைத்துப் பெருமை செய்தார். சங்கரலிங்கத்தின் பக்தியையும் பெருமையையும், சிறப்பினையும் கண்ட ஊர் மக்கள் அவரை முருகதாசர் என்று அழைத்தனர்.

ஒருமுறை அவரது கனவில் தோன்றி முருகப் பெருமான் காட்சி கொடுத்தருளினர். அதனால் வடிவேலனை நேரில் காண ஏங்கினார் சங்கரலிங்கம், குமரன் குடி கொண்டுள்ள  இடங்களுக்குச் சென்று வழிபடத் தொடங்கினார். இப்போது வள்ளியூர் என்று வழங்கப்படும் வள்ளிமலைக்குச் சென்ற சங்கரலிங்கம் அங்கு முருகப்பெருமானின் சன்னிதியில் கல்லாடை, இலங்கோடு, கவுபீனம், ருத்ராக்ஷ மாலை, தண்டம் ஆகியவற்றை வைத்து வணங்கி பூஜை செய்தார். பின்னர் அவற்றை அணிந்து கொண்டார். அது முதல் தண்டபாணி ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்டார். வண்ணம் என்ற பெயரில் பாடல்கள் புனைந்தால் வண்ணச் சரபம் என்ற அடை மொழியுடன் வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளானார்.

வள்ளிமலையில் இருந்து புறப்பட்ட ஸ்வாமிகள் குமரன் குடிகொண்டுள்ள திருத்தலங்களுக்குச் சென்று சக்தி மைந்தனின் அருட்காட்சி வேண்டி ஸ்தலயாத்திரை மேற்கொண்டார். திருச்செந்தூர் போன்ற முருகன் குடிகொடுண்டுள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.  ஆனாலும் முருகப்பெருமான் காட்சி தரவில்லையே என்று வேதனை கொண்டார். செங்கோட்டை அருகில் உள்ள திருமலை எனும் முருகதலத்திற்கு வந்த ஸ்வாமிகள், வேலவனை தொழுது வணங்கினார். முத்துக்குமரா அருட்காட்சி தா என்று வேண்டினார். ஆனாலும் முருகப்பெருமான் செவி சாய்க்கவில்லை. இதுவும் ஒரு திருவிளையாடல்தான். ஏமாற்ற மடைந்த தண்டபாணி ஸ்வாமிகள் மலையிலிருந்து உருண்டார். மலை உச்சியிலிருந்து உருண்டே கீழே அடிவாரத்தை அடைந்தார். காண்போர் பதறினர். ஆனால் ஸ்வாமிகளோ தனக்கு ஒன்றும் நேரவில்லை என்று கூறி எழுந்தார்.

ஸ்வாமிகளின் இடத்தோளில் உள்ள காயத்தினைக் கண்ட முருகப்பெருமான், வள்ளியை நோக்கி, நீ சென்று பச்சிலை வைத்து மருந்து இடுக என்று கூறினார். வள்ளியும் குறத்தி வடிவில் வந்து மருந்து பூச காயமும் மறைந்தது. ஸ்தல யாத்திரையின் அங்கமாக முருகதாசர் திருவண்ணாமலை, சென்னை கந்த கோட்டம், பழனி போன்ற திருத்தலங்களுக்கும் சென்று எம்பெருமானை வணங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம் சென்று சேதுபதி மன்னரை காண விரும்பினார். வடலூர் வள்ளல் இராமலிங்க ஸ்வாமிகளை நேரில் கண்டு உரையாடியுள்ளார் தண்டபாணி ஸ்வாமிகள். செட்டிநாடு சென்ற சுவாமிகள், குன்றக்குடி முருகப் பெருமான் மீது ஆறு வகுப்புகளும் வண்ணமும் பாடி அரங்கேற்றியுள்ளார்.

திருநெல்வேலியில் தவச்சாலை தொடங்க இலங்கைக்குச் சென்று சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தி, கண்டி, கதிர்காமம் போன்ற இடங்களுக்கும் சென்று வழிபட்டு பொருள் ஈட்டினார். பழனிமலை அடிவாரத்தில் சரவணப் பொய்கையின் அருகில் திருமடம் ஒன்றினையும் உருவாக்கினார். முருகதாசர், வடிவேலனை மட்டுமல்ல அவனது மாமன் திருவரங்க நாதனைப் பற்றியும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதியைப் பற்றியும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. உயிர்க்கொலை கூடாது என்பதையும் எல்லாச் சமயங்களும் ஒன்றே என்பதை உணர்த்தியுள்ளார் வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள். கடைசி கட்டத்தில் திருவாமாத்தூர் எனும் பாடல் பெற்ற திருத்தலத்தில் கவுமார மடம் நிறுவி அங்கேயே தங்கவிட்டார் ஸ்வாமிகள். தனது 59 ஆவது வயதில் 1898 ஆம் ஆண்டு ஆனிமாதம் 23 ஆம் நாள் வடிவேல் முருகனின் திருவடியை அடைந்தார். எம்பெருமானும் அருள்பாலித்து தம்மோடு இணைத்துக் கொண்டான்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.