பதிவு செய்த நாள்
19
பிப்
2013
10:02
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலின், மூலிகை தன்மை நிறைந்த கோடி தீர்த்த குளம் புதர் மண்டி உள்ளது. இக்குளம், ஊராட்சிகளுக்கு சொந்தமானதா, கோவிலுக்கு சொந்தமானதா என்பது தெரியாததால், யாரிடம் புகார் செய்வது என்று புரியாமல், பக்தர்கள் தவித்து வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், நான்கு வேதங்களால் உருவான மலை மீது, திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இம்மலையில், பல அற்புதமான மூலிகை செடிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மூலிகை குணம்: மழைக் காலங்களில், மூலிகை செடிகளின் வழியாக ஓடி வரும் மழை நீர், கிரிவலப்பாதையில், தேசுமுகிபேட்டை எனப்படும் இடத்தில் உள்ள கோடி தீர்த்த குளத்தில் சேர்கிறது. இதனால், அக்குளம் நோய் தீர்க்கும் குளமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இக்குளம்,7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், குளத்தின் உள்ளே புதர் மண்டி காணப்படுகிறது.
இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: கோடி தீர்த்த குளத்தின் நான்கு புறங்களிலும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, பல ஆண்டுகளை கடந்தும், நிலைகுலையாமல் காட்சி அளிக்கின்றன. மலையில், இருந்து வரும் மூலிகை நீர் இக்குளத்தில் தேங்குவதால், இதை பல ஆண்டுகளுக்கு முன் வரை குடிநீராக பயன்படுத்தினர். கோவிலின் புனிதம் கருதி, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், குளத்தை யாரும் ஆக்கிரமிக்காமல் பராமரிக்கின்றனர். கழிவுநீர் கலக்காதவாறு பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், குளம் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது.
புரியாத புதிர்: குளம் அமைந்துள்ள பகுதி, கொத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது என்றும், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கும் சொந்தமானது என்றும், சிலர் கூறுகின்றனர். இன்னும், ஒரு சிலர் கோவிலுக்கு சொந்தமான குளம் என்றும் கூறுகின்றனர். இதனால், குளத்தை சீரமைக்க, யாரிடம் முறையிடுவது என, தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.