பதிவு செய்த நாள்
19
பிப்
2013
10:02
நாகர்கோவில்: விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை யொட்டி நேற்று 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற சூரிய நமஸ்கார பிரதர்ஷன் நிகழ்ச்சி நாகர்கோவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடந்தது. விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் ஒரு ஆண்டு காலம் கொண்டாட முடிவு செய்யப்பட்டு பேரணிகள், விவேகானந்தர் வேடமணிந்து ஊர்வலம், வீடு தோறும் காவி கொடியேற்றல் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (18ம்தேதி) நாகர்கோவில் இந்து கல்லூரி வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கு பெறும் சூரிய நமஸ்கார நிகழ்ச்சி நடந்தது. விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு சூரிய நமஸ்காரத்தை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தும் நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு விவேகானந்தா ஜெயந்தி விழாக்குழு தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;- விவேகானந்தர் குமரிமுனையில் தவம் இருந்தார். இந்தியாவில் ஏராளமான துறவிகள் தோன்றி மறைந்துள்ளனர். நம்மால் மறக்க முடியாதவர் விவேகானந்தர். நாட்டு மக்கள் குறித்து கவலைபட்டார். வறுமை, எழ்மையை போக்க வேண்டும் என விரும்பினார். அனைவரும் கல்வி பயில வேண்டும் எனவும் விரும்பியவர் விவேகானந்தர். உலகில் பழமையான நம்நாடு இளைஞர்கள் மிகுந்த நாடு. ஜாதி, மதம் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும். உயர்கல்வி கொடுக்க வேண்டும். இளைஞர்கள் பாடப்புத்தகம் மட்டுமின்றி விவேகானந்தரின் பொன்மொழிகளை படிக்க வேண்டும். கட்டுபாடு, ஓழுக்கம் குறித்த விஷயங்கள் அதில் உள்ளன. அவ்வாறு பொன்மொழிகளை படித்தால் உலகின் உயர்ந்த நாடாக மாறும். விவேகானந்தரின் பொன்மொழிகளை ஏற்று செயல்படுத்தும் போது உலக அளவில் முதன்மை நாடாக மாறும். இவ்வாறு விஸ்வநாதன் பேசினார். உறுப்பினர் குமாரசுவாமி, நாகர்கோவில் நகராட்சி சேர்மன் மீனாதேவ், வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், விவேகானந்தர் ஜெயந்தி விழாக்குழு தென்பாரத அமைப்பாளர் ஹனுமந்தராவ், பா.ஜ., மாவட்ட செயலாளர் தேவ், நகர தலைவர் ராகவன், முன்னாள் தலைவர் ராஜன், பா.ஜ., பொறுப்பாளர்கள் விக்டோரியாகவுரி, மாநில மகளிரணி பொதுச்செயலாளர் உமாரதி பள்ளி தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி பேசியதாவது;- சூர்யநமஸ்காரம் பாரதத்தின் தொன்மையான காலச்சாரத்தின் அங்கம். இதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வலிமை மிக்க இளைய தலைமுறையை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். சுவாமி வினேகானந்தர் கண்ட கனவான வலிமையான பாரத இளைஞர்களை உருவாக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடக்கிறது.
சூரிய நமஸ்காரம் செய்யும் போது, ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலில் அனைத்து உறுப்புகளையும் தூண்டி முறைப்படுத்தும். இதயத்திற்கு நன்மை பயக்கும். நரம்பு மண்டலத்தை தூண்டும். ஜீரணசக்தியை வளர்க்கும். கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுப்படுத்தும். மன இறுக்கம், கவலை மற்றும் பதட்டம் அகன்று மனம் ஒருமைப்படுத்தும். உடலுக்கு மட்டுமில்லாமல் சூரிய நமஸ்காரமானது மனதுக்கு புத்துணர்சியை வலுப்படுத்தும். மாணவர்கள் ஆசனங்கள் அடங்கிய சூரிய நமஸ்காரத்தை இன்று செய்வது போன்று தினமும் செய்த வந்தால் நினைவற்றால் அதிகரித்து தேர்வு எழுதும் போது எளிதாகவும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம். இவ்வாறு சுவாமி சைதன்யானந்தஜி பேசினார். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., கோட்ட பொறுப்பாளர் சுரேஷ்குமார் சூரிய நமஸ்கார் மந்திரங்களான ஓம்மித்ராயநமஹ, ஓம் ரவயே நமஹ, ஓம் சூர்யாயநமஹ, பானவேநமஹ, ககாய நமஹ.... என மந்திரங்களை கூற அதற்கேற்றார்போல் மாணவி, மாணவிகள் சூரிய நமஸ்காரம் செய்தனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.