பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், புராதன சின்னங்கள் புதைந்துள்ள, 32 இடங்களை வேலி அமைத்து பாதுகாக்கும் பணியில், தொல்பொருள் துறை மும்முரமாக இறங்கி உள்ளது. வரலாற்று ஆசிரியர்கள், இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் உள்ளிட்ட சில ஆதாரங்களை கொண்டே, குறிப்பிட்ட பகுதியில், அக்கால மக்களின் பண்பாடு, நாகரிகத்தை வரையறுத்துள்ளனர். தொல் பொருள் ஆய்வு வல்லுனர்கள், அகழாய்வுகள் மூலமாகவும், மக்கள் பயன்படுத்திய அரும் பொருட்களை கொண்டும் காலத்தை கணித்து, தகவல்களை தருகின்றனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்திருந்த மக்களின் பண்பட்ட நாகரிக வளர்ச்சியை அறிய அகழ்வு பணிகளும், அவற்றில் கிடைத்துள்ள பொருட்களுமே ஆதாரமாக இருந்துள்ளன. இம்மாவட்டத்தில், பல்லவமேடு, குன்றத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர், வதியூர், வசவசமுத்திரம், ஓரத்தி உள்ளிட்ட 20 இடங்களில், 1863ம் ஆண்டு முதல் மத்திய, மாநில தொல்பொருள் ஆய்வு துறையினர் அகழாய்வுகள் நடத்தி, பலப்பல வரலாற்று தகவல்களை தந்துள்ளனர்.
அபராதம்: சென்னை சரக கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 32 இடங்கள் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளன. அதன் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான சிற்பங்கள், கோவில்கள், அவற்றில் உள்ள நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தினாலும், சேதப்படுத்த முயன்றாலும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு எழுதப்பட்ட எச்சரிக்கை பலகைகள், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்க, அவற்றை சுற்றி, 300 மீட்டர் சுற்றளவிற்கு கட்டடங்கள் இருக்கக் கூடாது எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு: இந்நிலையில், இந்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை, சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், குண்டுமேடு, வடமங்கலம் பகுதியில், தொல்பொருள் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அகற்ற முடியாமல், தொல்பொருள் துறையினர் தவித்து வருகின்றனர். இச்சூழலில் புராதன சின்னங்களைப் பாதுகாக்க, சென்னை சரகம் பகுதியில், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. தொல்பொருள் துறை இடத்தை ஆக்கிரமித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை பலகைகளை நடவும், தொல்பொருள் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வேலி அமைப்பு: தற்போது, மாகாண்யம் பகுதியில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலும், வடமங்கலம் பகுதியில், 7.71 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சிறுகளத்தூர் பகுதியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தொல்பொருள் துறைக்கு சொந்தமான இடங்களைச் சுற்றி, வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொல்லியல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""சென்னை சரகம் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் முதுமக்கள் தாழி உள்ள இடங்களில், வேலிகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது, என்றார். மேலும் அவர் கூறுகை யில், ""சேதமடைந்த வேலிகளை அகற்றவும், புதிய வேலி அமைக்கவும் பணிகள் மேற்கொண்டுள்ளோம். முக்கிய இடங்களில் மட்டும், முழுமையாக பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகிறது. சில பகுதிகளில் படிப்படியாக வேலி அமைக்கும் பணி நடைபெறும், என்று கூறினார்.