பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
புதுச்சேரி: அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு, அரவிந்தர் ஆசிரமத்தில் அவர் பயன்படுத்திய அறை வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிறந்த மீரா அல்போன்சா, அரவிந்தர் ஆசிரம அன்னை என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அரவிந்தரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, 1914ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, புதுச்சேரிக்கு வந்தார். மனித குலத்தின் நன்மைக்காக, அரவிந்தருடன் இணைந்து பணியாற்றிய அன்னை, 1968ம் ஆண்டில், புதுச்சேரி அருகே, சர்வதேச நகரான ஆரோவில்லை உருவாக்கினார். அன்னையின் பெருமுயற்சியால்தான், புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. அன்னை பிறந்த தினத்தன்று, அவர் பயன்படுத்திய அறைகள், பொருட்கள் மற்றும் அவரது சமாதி பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுவது வழக்கம். அன்னையின் பிறந்த நாளான நேற்று அவரது சமாதி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள், அன்னையின் சமாதி மற்றும் அவர் அறை உள்ளிட்டவைகளைத் தரிசனம் செய்தனர்.