பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
பஞ்சேஷ்டி: இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷ விழா, நாளை பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, பஞ்சேஷ்டி ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்தை, அகத்திய முனிவர் பல காலமாக வழிபாடு செய்ததால், அகத்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரன், இந்திராணி, விஸ்வரூபன் போன்ற தேவர்கள் அகத்திய முனிவருடன் பஞ்சேஷ்டியில் தங்கியிருந்து பிரதோஷ பூஜைகள் செய்து, பிரதோஷ விரதத்தை கடை பிடித்ததால், அகத்திய முனிவரால், அவர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது. பிரதோஷ மகிமை கொண்ட பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் பஞ்சேஷ்டியும் ஒன்று. பிரதோஷ காலத்தில், இங்கு வந்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ பெருமானை மனமுருக தரிசிப்பவர்களுக்கு, எந்த குறையும் ஏற்படாதபடி, இறைவன் நம்மை காப்பதாக ஐதீகம். வங்க கடல் அருகே அமைந்துள்ள, முக்கிய சிவ தலங்களில் பிரதோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் பஞ்சேஷ்டி தலமாகும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ விழா சிறப்பானது. நாளை இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷம் என்பதால், ஏராளமான பக்தர்கள் பஞ்சேஷ்டி கோவிலின் பிரதோஷ விழாவில் கலந்து கொள்வர். இதேபோன்று கவரைப்பேட்டை அருகே, அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி சந்திரசேகரேஸ்வரர், கோவில்களில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
சுருட்டப்பள்ளி: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், நாளை சனி பிரதோஷ விழா நடைபெறுகிறது. உருவ ரூபத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இக்கோவிலில், சிவபெருமான் உலகை காக்க, ஆலகால விஷத்தை உண்டு மயக்க நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.