பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
ப.வேலூர்: ப.வேலூர், காந்திநகர் விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். ப.வேலூர், சுல்தான்பேட்டை காந்திநகரில், விநயாகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன் மற்றும் மதுரை வீரன் ஸ்வாமி கோவில் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்தாண்டு ஃபிப்ரவரி, 20ம் தேதியன்று, கும்பாபிஷேகம் நடத்த விழாக் குழுவினர் முடிவு செய்தனர். அதையடுத்து, கடந்த, 19ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை, 8.30 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதல், மாலை, 6 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், வாஸ்துசாந்தி, முதற்கால யாகசாலை பிரவேசம், இரவு, 9.30 மணிக்கு கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. அதுபோல், 20ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், மூலமந்திர ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து, காலை, 6 மணிக்கு விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி அருள் பெற்றுச் சென்றனர்.