நெல்லையப்பர் கோயிலுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2013 10:02
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்கு 64 ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டரை விருதுநகர் தொழிலதிபர் உபயமாக வழங்கியுள்ளார். நெல்லை டவுனில் உள்ள காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் 14.50 ஏக்கர் பரப்பளவுடையது. இக்கோயிலில் 18 கிலோ வாட் திறன் மட்டுமே கொண்ட ஜெனரேட்டர் மட்டுமே இருந்தது. தற்போது அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பெரும்பாலான நேரங்களில் கோயில் இருளில் மூழ்கிவிடும். சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி உள்ளிட்ட சில முக்கிய சன்னதிகளில் மட்டுமே மின்தடை செய்யப்பட்ட நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் மின் விளக்குகள் எரியும். மின்தடை செய்யப்பட்ட நேரங்களில் நெல்லையப்பர் கோயிலில் இருளில் மூழ்கியிருப்பது குறித்த விபரம் விருதுநகர் தொழிலதிபர் சந்திரமோகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து நெல்லையப்பர் கோயிலுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் 64 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டரை உபயமாக வழங்கியுள்ளார். நெல்லையப்பர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனரேட்டரை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம், தொழிலதிபர் சந்திரமோகன் வழங்கினார். இதில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், ஆய்வர் ஆனந்த் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.