பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
காஞ்சிபுரம்: ராஜகுளம் தெப்போற்சவம் வரும் 25ம்தேதி மாலை, விமரிசையாக நடைபெற உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் உள்ளது. இங்குள்ள தெப்பகுளத்தில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்போற்சவம் நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வருவார். வழக்கம்போல் இந்த ஆண்டு தெப்போற்சவம், வரும் 25ம் தேதி மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது. தெப்போற்சவத்தில் கலந்து கொள்வதற்காக, வரதராஜப் பெருமாள் அன்று காலை 4:00 மணிக்கு, கோவிலில்இருந்து புறப்பட்டு, சின்னகாஞ்சிபுரம் திருவேங்கடம் நகர், வேலாத்தம்மன் கோவில் தெரு, செட்டியார்குளம். டாக்டர் எம்.ஜி.ஆர்., நகர், வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம், ஆகிய ஊர்களில் மண்டகப்படி கண்டருளி, பகல் 2:00 மணிக்கு, ராஜகுளத்தை சென்றடைவார். அங்குள்ள மண்டபத்தில், பெருமாளுக்கு திருமஞ்சனம், தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு, மாலை பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வருவார்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.