பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரி விழாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளைச் சேர்ந்த கோவில்களில் இருந்து உற்சவர்கள், மேள தாளம் முழங்க, நேற்று அதிகாலை கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். சுவாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரியும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. தீர்த்தவாரியில், தமிழகப் பகுதியிலிருந்து தீவனூர் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணிய சுவாமி, தீவனூர் லட்சுமிநாராயணப் பெருமாள், திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட சாமிகள் எழுந்தருளினர். புதுச்சேரியிலிருந்து மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள், பெரிய காலாப்பட்டு பாலமுருகர், சின்ன சுப்ராயப் பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன், கவுசிக பாலசுப்ரமணியர், சோலை நகர் விநாயகர், வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன், கதிர்காமம் கதிர்வேல் சுவாமி உள்பட 200க்கும் மேற்பட்ட உற்சவர்கள் பங்கேற்றனர்.
சுவாமி சமர்த்த அக்கல்கோட் மகராஜின் வெள்ளி பாதுகைகளுக்கு கடல் தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக, பாதுகைகளுக்கு பால் அபிஷேகம் அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஸ்ரீசமர்த்த சாயி பஜன் இடம்பெற்றது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு, நகரின் பல இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர், குடிநீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீர்த்தவாரியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பலர், மறைந்த தங்கள் முன்னோர் நினைவாக திதி கொடுத்தனர். வடக்கு பகுதி எஸ்.பி., ராமராஜூ தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கப்பட்டது. வீராம்பட்டினம்:வீராம்பட்டினம் கடற்கரையிலும் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில், முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவில், உப்பளம் பொறையாத்தம்மன் கோவில் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம கோவில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர்.
அழிந்துபோன அழகிய கடற்கரை: ஒவ்வொரு ஆண்டும், மாசிமக தீர்த்தவாரி, வைத்திக்குப்பம் கடற்கரையில், பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் இருந்தே விமரிசையாக நடந்து வருகிறது. அப்போது எல்லாம், வைத்திக்குப்பத்தில் பரந்து விரிந்த கடற்கரை இருந்தது. வெள்ளை வெளேர் மணல் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காட்சியளிக்கும். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுவாமிகள், கடற்கரை மணலில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்கள் கடற்கரை மணலில் காலாற நடந்து, நூற்றுக்கணக்கான உற்சவர்களை தரிசனம் செய்வது வழக்கம். சுனாமிக்குப் பிறகு கடலில் போக்கில் ஏற்பட்ட மாற்றம் உள்பட பல்வேறு காரணங்களால், வைத்திக்குப்பத்தில் கடற்கரை மணற்பரப்பு காலபோக்கில் முற்றிலுமாக காணாமல் போய்விட்டது. கடல் நீரும் ஊருக்குள் புகுந்துவிட்டதால், மாசிமகத்தின் பாரம்பரிய காட்சிகள் காணாமல் போய் விட்டது. மணல் பரப்பு இல்லாததால், கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கருங்கற்கள் மீதும், சாலையிலும் சாமி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பொதுமக்கள் கற்களில் மேல் ஏறி நின்றும், இறங்கியும், மாசிமகத்தில் சுவாமிகளை நேற்று தரிசித்து சென்றனர்.