பதிவு செய்த நாள்
28
பிப்
2013
10:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகளை, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் எண்ணினர். இம்மாத வசூலாக 49 லட்சத்து 53 ஆயிரத்து 750 ரூபாய், 85 கிராம் தங்கம், 3 கிலோ 150 கிராம் வெள்ளி இருந்தன. இதன் மொத்த மதிப்பு 52 லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாய்.
சிறப்பு படை: ஐதராபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, ராமேஸ்வரம் கோவில் பாதுகாப்பை பலப்படுத்த, மாநில சிறப்பு பாதுகாப்பு படை போலீசார், 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் , என ராõமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனன் கூறினார். இவர் கூறியதாவது: ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு பிறகு, ராமேஸ்வரத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறோம். தற்போது, கோவிலில் சன்னதி, முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் 16 கேமராக்கள் உள்ளன. கோவில் மேல் பகுதி, மூன்றாம் பிரகாரத்தில் கூடுதலாக 15 கேமராக்கள் பொருத்தப்படும். கிழக்கு, மேற்கு வாசல் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்படும். இங்கு போலீசார், பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே, கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பர். கோவிலுக்குள் உள்ள கடைகளில், வியாபாரிகள் கண்டிப்பாக, எலக்ட்ரானிக் விளையாட்டு பொருட்களை விற்கக் கூடாது. கோயில், நான்கு ரதவீதிகளில், முன்னாள் ராணுவ வீரர்களுடன் இணைந்து, சிறப்பு பாதுகாப்பு படை போலீசார், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். இங்குள்ள லாட்ஜ்களில் கண்டிப்பாக கேமரா பொருத்தி, சந்தேக நபர்கள் தங்கினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும். அக்னி தீர்த்தக்கரை, திட்டக்குடி, டோல்கேட்டில் நவீன கேமராக்கள் பொருத்தவும், பாம்பன் பாலத்தை 24 மணி நேரமும், கண்காணிக்கவும் சிறப்பு பாதுகாப்பு படையை பயன்படுத்த, அரசிடம் அனுமதி கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.