பதிவு செய்த நாள்
28
பிப்
2013
11:02
சென்னை: சுவாமி விவேகானந்தரை, சர்வசமய மாநாட்டிற்கு அனுப்பி, அவரை கண்டறிந்ததே தமிழகம் தான், என்று, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரின், 150 வது பிறந்த தின, ஆண்டு கொண்டாட்டங்களை, முதல்வர் துவக்கி வைத்து, ஆண்டு முழுவதும், அணையாத, "விவேக ஜோதியை, ஏற்றி வைத்தார். இந்த ஜோதி, விவேகானந்தர் இல்லத்தின் முன்பு, வைக்கப்படுகிறது. அப்போது, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், கவுதமானந்தஜி மகராஜ் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர், 1892 மற்றும், 97ம் ஆண்டுகளில், இங்கு வந்து சென்றார். அவரை, சர்வசமய மாநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தது, தமிழக மக்கள் தான். அவரை கண்டறிந்ததே, தமிழகம் தான். 1897ம் ஆண்டு, கொழும்பில் இருந்து, தமிழகத்திற்கு விவேகானந்தர் வருவதாக இருந்ததால், முந்தைய ஆண்டிலேயே அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. தற்போது விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள, கேஸ்டில் கெர்னான் கட்டடத்தில், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை, நீதிபதி சுப்ரமணிய ஐயர், தியசாபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட், கிறிஸ்தவ மதத்தை பரப்ப, சென்னை வந்த அமெரிக்க பாதிரியார் ஆகியோர், செய்து வந்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஐஸ் ஹவுஸ் வரை, அவரை வரவேற்க, அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. மீனவ மக்களும், விவேகானந்தரை வரவேற்க, வீடுகளில் விளக்கேற்றி வைத்து காத்திருந்தனர். தொடர்ந்து, 1897ம் ஆண்டு, பிப்ரவரி, 6ம் தேதி, வந்த விவேகானந்தர், இந்த இல்லத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து, இளைஞர்களுக்காக சொற்பொழிவுஆற்றினார். இந்த இல்லத்தின் குத்தகை முடிந்த நிலையில், கடந்தாண்டு, முதல்வரை பார்த்து கோரிக்கை விடுத்த போது, பண்பாட்டு மையத்திற்காக, 1803 சதுரடி காலியிடத்தை கொடுத்ததுடன், 99 ஆண்டு குத்தகைக்கு இடத்தை வழங்கியுள்ளார். இதனால், பண்பாட்டு மையம் அமைக்க, நிதி பெற வழி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.