பழநி: பழநி மாரியம்மன் கோயில், மாசித்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் அலங்கரித்து, சாட்டுவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கம்பத்திற்கு புனித நீர், பால் ஊற்றி வழிபட்டனர். பழநிதேவஸ்தான உபகோயில்களில் ஒன்றான மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.22ல் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் விழா துவங்கியது. 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டு விழாவில், காலை திருக்கம்பத்திற்கு காணியாளர் அரிவாள் எடுத்துக் கொடுத்தல் நிகழ்ச்சி நடந்து. மாலையில் காணியாளக்கவுண்டர் அழைப்பு, மரியாதை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குமேல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு, திருக்கம்பம் சாட்டுவிழா நடந்தது.கம்பத்திற்கு ஏராளமான பக்தர்கள் புனித நீர், பால் ஊற்றி வழிபாடு செய்தனர். மார்ச் 5ல் அம்மனுக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், தங்கமயில் வாகனத்தில் திருஉலாவும் நடக்கிறது. மார்ச் 12ல் திருக்கல்யாணமும், மார்ச் 13ல் தேர்த்திருவிழாவும் நடக்கிறது.