பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அர்ஜூனா நதிக்கரையில் உள்ள 10 ம்நூற்றாண்டை சேர்ந்த அழகிய மணவாளப் பெருமாள் கோயில், முற்றிலும் இடிக்கப்பட்டு அதே கற்களை கொண்டு, பழமை மாறாமல் புதிதாக கட்டும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.வத்திராயிருப்பு அருகே 2 கி.மீ. தொலைவில் அர்ஜூனா நதிக்கரையில் அமைந்துள்ளது அழகிய மணவாளப்பெருமாள் கோயில். 10 ம் நூற்றாண்டை சேர்ந்தது. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற போது , இங்கு வந்து தங்கிய பெருமையுடன் "தர்ம ஆரண்ய ஷேத்திரமாக விளங்கு கிறது. இக்கோயிலுக்கு ஆற்றை கடந்து செல்லவேண்டியிருந்ததால் பக்தர்கள் வருகையின்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதர்மண்டி கிடந்தது. புரட்டாசி சனி உட்பட விஷேஷ தினங்களில் மட்டும் பக்தர்கள் சென்று வந்தனர். கோயிலை புனரமைக்க, அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஆண்டு மத்திய அரசின் 13 வது நிதி ஆணையம், தமிழக அறநிலையத்துறை மூலமாக, கோயிலை புனரமைக்க 20 லட்சரூபாய் வழங்கியது. இதை தொடர்ந்து கோயிலின் கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், கோபுரம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. 10 ம் நூற்றாண்டில் எப்படி கட்டப்பட்டிருந்ததோ, அதே போன்று அதே கற்களை கொண்ட கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக கற்களுக்கு வரிசை எண்கள் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொரு கற்களாக பெயர்த்து எடுக்கப்பட்டு, கோயில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் சிமென்ட் "பீம் மூலம் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, அதன் மீது வரிசை எண் வீதம் கற்கள் வைத்து கட்டப்பட்டு வருகிறது. தற்போது மேல் ஓடும் பதிக்கும் நிலையில், பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக 20 சிற்பிகள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர். ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெறும். இது தவிர, மகாமண்டபம், வசந்த மண்டபம், முன்மண்டபம், திருமடப்பள்ளி, தாயார் சன்னதி, ஏகாதசி மண்டபம் உட்பட, ஒரு கோடிக்கு மேல் மதிப்பீடு செய்யப்பட்ட பணிகளும் உள்ளன. இதற்கு பக்தர்கள் மூலமே செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதைதொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்க, அரசுக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.