பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் தேர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், புதிதாக இரும்பு சக்கரங்கள் அமைக்கப்பட உள்ளது.திருப்பூரில், விஸ்வேஸ்வரசாமி, வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இரண்டு கோவில்களுக்கும் தனித்தனியாக தேர்கள் உள்ளன. ÷ர்த்திருவிழாவின் போது, வீதியில் உலா வரும் தேர்களுக்கு, மரத்திலான சக்கரம் உள்ளது. இதனால், நேரம் கூடுதலாவதோடு, பக்தர்கள் இழுத்து செல்வதற்கும் சிரமமாக இருந்தது. எனவே, இரண்டு தேர்களுக்கும், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், இரும்பு சக்கரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி பெல் நிறுவனத்தில், இரண்டு தேர்களுக்கும் தலா நான்கு வீதம் எட்டு சக்கரங்கள் மற்றும் நான்கு இரும்பு அச்சுக்கள் வாங்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " கோவில்களிலுள்ள தேர்களை புதுப்பித்து, இரும்பு சக்கரங்கள் அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. மரத்தேர்களுக்கு, இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளது. தற்போது, ஒரு தேருக்கான அச்சு, சக்கரங்கள் வந்துள்ளன. இரண்டு தேர்களுக்கும் சக்கரங்கள் வந்தவுடன் பொருத்தும் பணிகள் உடனே நடக்கும் என்றார்.