பதிவு செய்த நாள்
06
மார்
2013
10:03
திருத்துறைப்பூண்டி: முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில், 69வது ஆண்டு பெருந்திருவிழா, காப்புக்கட்டுடன் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக துவங்கியது. இவ்விழாவின், முக்கிய நிகழ்வான தீ மிதித்திருவிழா வரும், 17ம் தேதி நடக்கிறது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் முள்ளியாற்றின் வடகரையில், முள்ளாட்சி மாரியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில், 69 ஆண்டு பெருந்திருவிழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் வெகு விமர்சையாக துவங்கியது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.இதையடுத்து அன்ன வாகனம், புஷ்ப வாகனம், மயில் வாகனம், காமதேனு, சிம்ம வாகனத்தில், தினமும் அம்பாள் வீதியுலா நடத்தப்படுகிறது. இதையடுத்து வரும், 16ம் தேதி வெண்ணெய் தாழியும், இரவு ரிஷப வாகன காட்சியும் நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை திருத்தேர், காவடி அபிஷேகம், மாலை வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் பால் குடம் எடுத்து, வேண்டுதல் நிறைவேற்றியதற்கு தீக்குண்டம் இறங்கி, அம்மனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.விழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து, அம்மனை வழிபடுகின்றனர். வரும், 19ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் நீதிமணி, தாக்கார் ராஜாங்கம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.