பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
சென்னை:தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், "தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை, 1ம் தேதி முதல், ஆன்மிக சொற்பொழிவு நடத்த வேண்டும், என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை:தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 481 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில், கோடி அர்ச்சனை, லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை ஆகியவற்றை தனியார் அமைப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்திரை, 1ம் தேதி, தமிழ் புத்தாண்டு முதல், அந்த நிகழ்ச்சிகளை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும், என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும், கோயில்கள் அனைத்திலும், தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை, 1ம் தேதி முதல், ஆன்மிக சொற்பொழிவு நடத்த வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் மட்டும் சொற்பொழிவு நடக்கும் கோயில்களில், இனிமேல், இரண்டு நாட்கள் கட்டாயம் நடத்த வேண்டும்.இதுவரை, சொற்பொழிவு நடத்தப்படாத கோயில்களில், வாரம் இரண்டு நாட்கள் கட்டாய சொற்பொழிவு நடத்தப்பட வேண்டும். அந்தந்த கோயில்கள் நிர்வாகமே சொற்பொழிவாளர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.இதில் சைவம், வைணவ மத கோயில்கள் அதற்கேற்ப சொற்பொழிவாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சொற்பொழிவாளர்களுக்கு ஒரு சொற்பொழிவுக்கு குறைந்த பட்சம், 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 500 ரூபாய் வரை கோயில் நிதியில் இருந்து வழங்கலாம்.
மேலும், கோயிலின் வருவாயை அடிப்படையாக கொண்டு, இதில் மாற்றங்களை செய்து கொள்ளலாம். கோயில்களில் சொற்பொழிவுகள் நடத்தப்படுவது பற்றி பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள ஆன்மிக சொற்பொழிவாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு திடீர் மவுசு அதிகரித்து உள்ளது.இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: சித்திரை, 1ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை, வெகு விமரிசைமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அன்று முதல் வாரம் தோறும் கட்டாய சொற்பொழிவு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிலை கோயில்கள் அனைத்திலும் தினந்தோறும் சொற்பொழிவு நடத்தப்பட உள்ளது. சொற்பொழிவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.