பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
சென்னை: ""கேரள கோயில்கள், இரண்டாயிரம் ஆண்டு பழமையை பிரதிபலிப்பதாக உள்ளன, என, தொல்லியல் துறை, முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறினார்.சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தமிழ் ஆர்ட்ஸ் அகடமியில், "கேரள கோயில்களின் சிறப்புகள் குறித்து, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசியதாவது:கேரள மாநில கோயில் அமைப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டு முறைகள், வேறு எங்கும் காண முடியாத தனித்தன்மை பெற்றவை. இயற்கை சூழலில், கோயில்கள் தூய்மையாக பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், கோயில்களின் வழிபாடுகள் எப்படி இருந்ததோ, அப்படியே, தற்போதும் தொடர்கின்றன.தனி சிறப்புகேரளா, மலைப்பகுதி என்பதால், ஏராளமான அரிய கற்கள் இருந்த போதிலும், செங்கல், மரம், உலோகம், ஓடுகள் கொண்டே, கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. கோயிலின் உள் வேலைப்பாடுகள், மரத்தால், மிக நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மர வேலைப்பாடுகளில், கேரள கலைஞர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை அறியலாம்.கேரள கோயில் நுழைவாயில் முன், மிக உயரமான விளக்கு ஒன்று அமைப்பது மரபு. இது, 15 அடி உயரமும், பல அடுக்குகள் கொண்டதாகவும், கீழே, ஆமை ஒன்றின் முதுகில் இருந்து, எழும்புவதாக அமைத்திருப்பர். இந்த நுழைவாயில் அமைப்பு, வேறு எங்கும் காண முடியாத தனி சிறப்பு வாய்ந்தது.நுழைவாயில் உச்சியில், அந்தந்த கோயிலுக்கு உரிய வாகனங்கள் இருக்கும். சிவன் கோயிலில், நந்தியும், பெருமாள் கோயிலில், கருடனும், வாகனங்களாக வைக்கப்பட்டு உள்ளன.கோயில் கொடி மரத்தின் கீழ், உலோகத்தால் ஆன, எட்டு தெய்வங்களின் உருவங்கள் இருக்கின்றன. மன அமைதி கோயில் திருச்சுற்றுகளில் இயற்கை மண்ணையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கோயில் திருச்சுற்றுக்குள், தேவையற்ற, புதுக்கட்டடங்களை எழுப்புவதில்லை.இது போன்ற தனித்தன்மை வாய்ந்த பல அம்சங்கள், கேரளத்து கோயில்களில் காண முடிகிறது. இயற்கை சூழலுடன், பழமையான வழிபாட்டு முறைகளும், கேரள கோயில்களில் காணப்படுவதால், பக்தர்களுக்கு மன அமைதியை தருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.