பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
சென்னை: சென்னையில் உள்ள சிவன் கோயில்களில், இன்று, மஹா சிவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில், மாலையில் இருந்து, நாளை அதிகாலை வரை, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இரவு முழுக்க விழித்திருந்து, இறைவனை வேண்டினால், சிவனின், மூன்றாவது கண்ணை தரிசிக்க முடியும் என்பது, சிவராத்திரியின் தத்துவ மரபு. இதனால், ஒவ்வொரு ஆண்டு சிவராத்திரியின் போதும், இந்துக்கள், விடிய விடிய விழித்திருந்து, சிவனை தரிசிப்பர். இன்று, நாடு முழுவதும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னையின் அனைத்து சிவன் கோயில்களிலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.பாரிமுனை சென்னமல்லீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், பாரிமுனை கந்தகோட்டம், பாடி திருவலிதாயம், மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவட்டீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் காரணீஸ்வரர் ஆகிய முக்கிய சிவன் கோயில்கள் உட்பட, சென்னையில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும், சிவராத்திரிக்கான சிறப்பு ஏற்பாடுகளில், 1,009 கலசாபிஷேகமும், சங்காபிஷேகமும் நடக்கும்.இன்று மாலையில் இருந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், அதிகாலை வரை, பரத நாட்டியம், நகைச்சுவை நாடகம், சிவ கவியரங்கம், உச்சிகால பூஜை, முழு நீள பக்தி நடனம், ஆன்மிக பட்டிமன்றம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.