பதிவு செய்த நாள்
15
மார்
2013
05:03
இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.
இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.
பாயிரம் - கடவுள் வாழ்த்து
வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்
நுதல் முதலிய பொருள்
அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள்
பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்
அவை அடக்கம்
கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே
நூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்
நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்
தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே
செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த
நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்
அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த
திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே
நூல் வந்த வழி
விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே
முதல் பாகம்
1.நாட்டுச் சருக்கம்
சுரமை நாட்டின் சிறப்பு
மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுந்ணணள் ந்?தியது சுரமை யென்பவே. 1
கயல்களும் கண்களூம்
பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே. 2
வயல்களும் ஊர்களும்
ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே. 3
பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை
நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
பொழிலகம் பூவையுங் கிளீ?யும் பாடுமே
குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே. 4
வண்டுகளுங் கொங்கைகளும்
காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே. 5
சுரமை நாட்டின் நானிலவளம்
வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன்னரலு நாடதே. 6
குறிஞ்சி நிலம்
முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். 7
முல்லை நிலம்
ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம். 8
மருத நிலம்
அணங்க னாரண வாடல் முழவமும்
கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம். 9
நெய்தல் நிலம்
கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம். 10
குறிஞ்சி நிலம்
கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம். 11
முல்லை நிலம்
கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லாமண நாரும ருங்கினே. 12
மருதம்
நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்
ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம். 13
நெய்தல்
கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே. 14
குறிஞ்சி
நீல வால வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம். 15
முல்லை
நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம். 16
மருதம்
துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றதுபு லம்பின பொய்கையே. 17
நெய்தல்
வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம். 18
குறிஞ்சி
காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சர லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம், 19
முல்லை
தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே. 20
மருதம்
அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே. 21
நெய்தல்
கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலும் கழியெலாம். 22
குறிஞ்சி
கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்
மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே. 23
முல்லை
பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே. 24
மருதம்
மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம். 25
நெய்தல்
சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம். 26
திணை மயக்கம் மங்மலர்சி
கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே. 27
திணை மயக்கம்
கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே. 28
சுரமை நாட்டின் சிறப்பு
மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. 29
2.நகரச் சருக்கம் - சுரமை நாட்டுப் போதனமா நகரம்
சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே. 30
நகரத்தின் அமைதி
சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே. 31
அகழியும் மதிலரணும்
செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே. 32
அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு
இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம் 33
மாடங்களின் மாண்பு
மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே. 34
இதுவுமது - வேறு
அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே. 35
மாடங்களின் சிறப்பு
கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே. 36
மாடத்திற் பலவகை ஒலிகள்
மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே 37
வண்டுகளின் மயக்கம்
தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே. 38
கடைத்தெரு
பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே. 39
சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்
காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே. 40
அரசர் தெருவழகு
விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. 41
செல்வச் சிறப்பு
கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே. 42
மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி
தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே. 43
இன்ப உலகம்
மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே. 44
பயாபதி மன்னன் மாண்பு
மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே 45
பயாபதி மன்னன் சிறப்பு
எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே. 46
மக்கட்குப் பகையின்மை
நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே. 47
குடிகளை வருத்தி இறை கொள்ளாமை
ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே. 48
மன்னனின் முந்நிழல்
அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே. 49
இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்
மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ 50
அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான் 51
அரசர் சுற்றத்தின் இயல்பு
கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்
றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே. 52
அரசியர்
மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் 53
அரசியர் இயல்பு
பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்
அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார் 54
காமம் பூத்த காரிகையர்
காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார். 55
பட்டத்து அரசிகள் இருவர்
ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார் 56
பெருந்தேவியர் இருவரின் பெற்றி
நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள் 57
மங்கையர்க்கரசியராகும் மாண்பு
பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே. 58
இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்
பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார் 59
மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்
மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே 60
மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்
சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார். 61
மாலாகி நிற்கும் மன்னன்
மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான் 62
முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே. 63
3.குமாரகாலச் சருக்கம்
தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்
ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்
வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்
ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார் 64
மிகாபதி விசயனைப் பெறுதல்
பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள
வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான் 65
சசி திவிட்டனைப் பெறுதல்
ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார் 66
விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்
திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர்
இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே 67
மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்
செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே 68
விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது
காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு பொலங்குழை புரளுங் காதினன் 69
மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை
வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே 70
திவிட்டனுடய உடல் முதலியன
பூவயம் புதுமலர் புரையு மேனியன்
து?விரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன் 71
கை முதலியன
சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே 72
இருவரும் இளமை எய்துதல்
திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார் 73
மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்
உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்
கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார். 74
மங்கையர் மயங்குதல்
கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே 75
நங்கையர் மனத்தில் விசயன்
வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார் 76
மங்கையர் மாட்சி
கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே 77
காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்
திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார் 78
அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்
மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான் 79
அரசன் உறங்குதல்
மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான் 80
உடற் பாதுகாப்பாளர்கள்
மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார் 81
திருப்பள்ளி எழுச்சி
தங்கிய தவழழொளி தடாவி வில்லிட
மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்
பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார் 82
அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்
அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான் 83
வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்
விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ தெண்ணினார் 84
அரசன் வாயிலை அடைதல்
பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்
றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
கன்னியர் கவரிகா லெறியக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான் 85
மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்
மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார் 86
அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்
வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான் 87
வேறு - மண்டபத்திற்குள் புகுதல்
பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான் 88
அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி
குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான் 89
அரசன் குறிப்பறிந்து அமர்தல்
பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார் 90
சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்
முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம் 91
படைத் தலைவர்கள் உடனிருத்தல்
வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்;
எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே 92
புலவர்கள் வருதல்
காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே 93
இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்
பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி
மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார் 94
இதுவும் அது
மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார் 95
வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை
இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான் 96
நிமித்திகன் வரவு
ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான் 97
அரசன் நிமித்திகனை வரவேற்றல்
ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்
ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான் 98
நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்
உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான் 99
அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்
கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே 100
கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்
மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான் 101
தூதன் ஒருவன் வருவான் என்றல்
கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிகநா னேளு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான் 102
நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்
என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார் 103
அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்
உரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட
முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான் 104
வேறு - அரசன் பேசுதல்
கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான் 105
அமைச்சர்கள் பேசுதல்
சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே 106
திவிட்டன் சிறந்தவனே என்றல்
நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார் 107
வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்
சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலால்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே 108
வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்
விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே 109
பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்
நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே 110
அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்
என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்?
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான் 111
துருமகாந்தன் பொழிலையடைதல்
எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான் 112
4.இரதநூபுரச் சருக்கம்
நுதலிப்புகுதல்
புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே 113
வெள்ளிமலை
நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்
டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்
இலகு வின்மணி வானியன் மாடெலாம்
விலக நின்றது விஞ்சையர் குன்றமே 114
தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்
தொக்க வானவர் சூழ்குழ லாரொடும்
ஒக்க வாங்குள ராய்விளை யாடலால்
உக்க சோதிகள் சோலையி னூடெலாம்
செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே 115