பதிவு செய்த நாள்
16
மார்
2013
11:03
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக யாக பூஜைகள் துவங்கியது. பக்தர்கள், திருப்பணிக்குழுவினர் பூஜையில் பங்கேற்றனர்.தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோயில்கள் வீரபாண்டி மற்றும் கம்பத்தில் உள்ளன. சுயம்புவாக தோன்றிய அம்மன் இங்குள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 22 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், கம்பம் பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்பர்.இந்த கோயில் கும்பாபிஷேகம், கடந்த 1993 ல் கடைசியாக நடத்தப்பட்டது.கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், இம் மாதம் 18 ந்தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெறுகிறது. ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் வெளிப்பிரகார நடைபாதை, ற்று சுவர் பணிகளும், நவக்கிரஹகம் மற்றும் விநாயகர் சன்னதி, நகர்மன்ற உறுப்பினர் வாசு, கோபுர வர்ணம் மற்றும் மணிமண்டப தரை தளம் பணிகளை மொட்டையாண்டியும் செய்து கொடுத்துள்ளனர்.கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வரர், தனபூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11, மாலை 6 மணி வாஸ்து சாந்தியுடன் முதல் நாள் யாக பூஜைகள் முடிவடைந்தது. இரண்டாம் நாள் பூஜைகள், இன்று (மார்ச் 16)நடக்கிறது. தொடர்ந்து நான்கு காலயாக பூஜைகள் நடைபெற்று, இம் மாதம் 18 ல் காலை 10 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.