மாடோ, மனிதனோ, பூச்சியோ, புழுவோ, சிங்கமோ, கரடியோ... மண்ணில் எந்த உயிராகப் பிறந்துவிட்டாலும் இன்பம், துன்பம் என்னும் அனுபவங்களைப் பெறாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பிறவியில் இருந்து விடுபடுவதையே வீடுபேறு என்கின்றனர். வைகுண்டம் என்ற சொல்லுக்கு துன்பங்களில் இருந்து விடுபட்டநிலை என்று பொருள். என்றாவது ஒருநாள் உயிர்கள் அடையவேண்டிய உன்னத நிலையே வீடுபேறு. நாம் இப்போது குடியிருக்கும் இடத்தையும் வீடு என்றே சொல்கிறோம்.வீடு என்னும் சொல் விடு என்பதில் இருந்து வந்தது. அங்குமிங்கும் அலையும் மனிதன் வீட்டுக்குள் நுழைந்தவுடன், அப்பாடா! இப்ப தான் நிம்மதி! என்று சொல்வதைப் பார்க்கலாம். அதுபோல, பிறவி எடுத்த உயிரானது, பூமியில் தன் கடமையை முடித்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடமான வீடுபேற்றுக்கு திரும்புகிறது. துன்பத்தில் இருந்து விடுபடும் இடமாக நாம் வாழும் வீடு இருக்க வேண்டும். சண்டை சச்சரவுக்கு அங்கே சிறிதும் இடமிருக்கக் கூடாது. மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்க வேண்டும். இப்படி இருந்தால் வீடு சொர்க்கமாக மாறிவிடும். சொர்க்கவாழ்விற்கு ஒத்திகை பார்க்கும் இடமாக வீட்டை நாம் மாற்ற முயல்வோம்.