பதிவு செய்த நாள்
22
மார்
2013
11:03
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், திருவாதிரை உற்சவம் சிறப்பாக நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம், 20 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். கோவில் வளாகத்தில், ஆதிகேசவப்பெருமாள், ராமானுஜர், ராமர், எதிராஜநாதவள்ளி தாயார், வேணுகோபால், ஆகியோருக்கு தனி சன்னிதி உள்ளது. கோவிலில் மாதம்தோறும், ராமானுஜர் அவதரித்த திருவாதிரை தினத்தில், திருவாதிரை உற்சவம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் திருவாதிரையையொட்டி, ராமானுஜர் கோவில் வளாகத்தில் உள்ள, தீர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பகல் 1:00 மணிக்கு, தேன், இளநீர், பால், தயிர் ஆகியவற்றால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதியை வலம் வந்தார். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர்.