பதிவு செய்த நாள்
25
மார்
2013
10:03
சேலம்: தமிழக கோவில்களில், ஆஸ்தான வித்வான்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால், விசேஷ நாளில், இசைக்கருவிகள் வாசிக்க ஆள் கிடைக்காமல், கோவில் நிர்வாகத்தினர் திணறிவருகின்றனர்.தமிழகம் முழுவதும், 38,481 கோவில்கள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோவில் வருமானத்தை பொறுத்து, மூன்று நிலைகளாக கோவில்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.விசேஷ தினங்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்களில், நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகியவற்றை வாசிக்க, கோவில்களில் தகுதி வாய்ந்த ஆஸ்தானவித்வான்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர், பணி ஓய்வு பெற்று விட்டதால், தற்போது, முதல் நிலை கோவில்களில் மட்டுமே, சிலர், ஆஸ்தான வித்வான்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால், விசேஷ நாட்களில், வெளியில் இருந்து வித்வான்களை அழைத்து வந்து, கோவில் நிர்வாகத்தினர், இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டி உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில், இந்த நிலை உள்ளது.அரசு இசைப் பள்ளியை சேர்ந்த தகுதி வாய்ந்தவர்கள், பரம்பரையாக கோவிலில் பணியாற்றி, தகுதி பெற்றிருக்கும் வித்வான்களின் வாரிசுதாரர்கள் ஆகியோரை, இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செய்து, வித்வான்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.