பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டத்தில் இருந்து பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க, 50 லோடு வெல்லம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, எல்.பி.பி., காலிங்கராயன் ஆகிய பாசன பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. பதிவு செய்த கரும்பை தவிர, மற்ற கரும்புகளை நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்ல உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. கோபி சுற்று வட்டாரத்தில் அய்யம்பாளையம், ஒத்தகுதிரை, கவுந்தப்பாடி, முள்ளாம்பரப்பு, அவல்பூந்துறை, ஆப்பக்கூடல், நாதிபாளையம், நாகதேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் உற்பத்தி ஆலைகள் அதிகளவில் காணப்படுகிறது. கரும்பு அறுவடை சீஸன் முடியும் தருவாயில் உள்ள நிலையில், வெல்ல உற்பத்திக்கு தேவையான கரும்பு கிடைக்கவில்லை. மேலும், ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் ஆகிய பகுதிகளில், கரும்பு அறுவடை சீஸன் நிறைவடைந்தது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு வெல்லம் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை கவுந்தப்பாடி மற்றும் சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், வெல்ல மார்க்கெட்டில் குவிந்து, வெல்லத்தை வாங்கி செல்கின்றனர். பழநியில் இன்று நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவுக்கு, பஞ்சாமிர்தம் தயாரிக்க, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, வாழை, வெல்லம் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. சித்தோடு, கவுந்தப்பாடி பகுதியில் இருந்து, 50 லோடு வெல்லமும், கோபி வேளாண்மை உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் இருந்து, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாழை தார் வரையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெல்லம் வியாபாரிகள் கூறியதாவது: சென்ற இரு வாரத்துக்கு முன் அச்சு வெல்லம், 30 கிலோ மூடை, 820 ரூபாய், உருண்டை வெல்லம், 780 ரூபாய், நாட்டு சர்க்கரை, 1,300 ரூபாய் வரை விற்றன. ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசத்துக்கு அதிகளவில் வெல்லம் செல்கிறது. வெல்லம் தேவை அதிகரிப்பால் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அச்சு வெல்லம், 30 கிலோ மூடை, 950 முதல் 1,050 ரூபாய், உருண்டை வெல்லம், 60 கிலோ மூடை, 1,450 முதல் 1,750 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரும் காலங்களில் வெல்லத்தின் தேவை அதிகரிக்கும். கரும்பு உற்பத்தி குறைந்ததால், விலை மேலும் உயரும். பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க ஈரோட்டில் இருந்து, 50 லோடு வெல்லம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.