பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி விழாவில் பக்தர்கள் "அரோகரா கோஷத்துடன் பால்குடம், காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழா நேற்று நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் நொச்சிவயல் ஊரணியில் தீர்த்தமாடி பால்குடம், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் ஏந்தியும் கன்னத்தில் 2 அடி முதல் 12 அடி வரையிலான அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் அரண்மனை, வண்டிக்கார தெரு வழியாக "அரோகரா கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிவிடு முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7.30 மணிக்கு மேல் பூக்குழி இறங்கினர். முஸ்லிகள் உட்பட பல அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமக்குடி: பரமக்குடி கிழக்குப்பகுதி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, ஐந்துமுனை ரோடு, எமனேஸ்வரம் ஜீவாநகர் முருகன் கோயில்களுக்கு, வைகை ஆற்றில் இருந்து பால்குடம், மயில், இளநீர் காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர்.ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள, மேலவாசல் முருகன் கோயிலுக்கு, நேற்று காலை முதல், மெய்யம்புளி, பேக்கரும்பு, செம்மமடம் சேர்ந்த பக்தர்கள் பால், தேர் காவடியில் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுரோடு நடராஜபுரத்தில் இருந்து, மினி லாரியை கயிற்றில் கட்டி, ஒரு முனையில் ஒரு பக்தர் முதுகில் அலகு குத்தி இழுத்தும், வண்டியின் மேல் 4 பக்தர்கள் அலகு குத்தி, பறக்கும் காவடியாக வந்தனர். மாலையில் பால், பஞ்சாமிர்தம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட ஒன்பது தானியங்களில் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் மங்களநாதசுவாமி பாதயாத்திரை குழு சார்பில் சித்தி விநாயகர் கோயிலிருந்து, வடக்கூர் வழிவிடு முருகன் கோயிலுக்கு, 301 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். மாவட்டத்தில் பல முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.