பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
பவானி: கோடை துவங்கிய நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மிக குறைந்துள்ளது. இதனால், பவானி கோவில் பின் புறம் காவிரியில் உள்ள குளத்தை கோவில் நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் சேர்ந்து தூர்வார வேண்டும். பவானி சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம். இக்கோவிலின் பின்பறம் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி (சரஸ்வதி) போன்ற மூன்று நதிகள் சங்கமிப்பதால், சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முக்கூடல் சங்கமம் என்ற பெயரும் உண்டு. தவிர, இக்கோவிலை காசிக்கு அடுத்தப்படியாக கருதுவதால், தென்னகத்தின் காசி என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் பல விழாக்கள் கொண்டாப்படுவது வழக்கம். உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடி சுசுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தங்கள் குடும்பத்தில் இருக்கும் முன்னோர்கள் இறந்த நிலையில், அவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆடி, தை போன்ற மாதங்களில் வரும் அமாவாசையில் மிக அதிக அளவில் வந்து திதி, பரிகாரங்கள் செய்து, காவிரி ஆற்றில் புனித நீராடி, இறைவனை தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றி உள்ளதால், குளத்தில் சேறும் சகதியுமாக உள்ளது. இதனை சில மாதங்களுக்கு முன் சுத்தம் செய்தபோது தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் தூர்வாரி குளத்தை சுத்தம் செய்தால், புனித நீராட வசதியாக இருக்கும். தவிர, பக்தர்கள் பரிகாரம் செய்தபின் குளத்தில் குளித்து விட்டு, தாங்கள் அணிந்து இருக்கும் துணிகளை குளத்தில் போட்டு செல்கின்றனர். இவற்றை அப்புறப்படுத்த ஏலம் விடப்பட்டு, துணிகளை அகற்ற வேண்டும். இதில் தேவையான நல்ல துணிகளை மட்டும் எடுத்து கொண்டு, மற்றவைகள், சாப்பிட்ட இலை, தட்டு, குப்பைகள், மாலை போன்றவைகளை அப்படியே விட்டுச் செல்கின்றனர். தற்போது தேவையற்ற துணிகள் குளிக்கின்ற இடம் அருகில் கொட்டி, மர்ம நபர்கள் மூலமாக தீ வைத்து எரிக்கின்றனர். அந்த பகுதி சிறிய புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கோவில் புனிதத்தை காக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.