பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
நித்திரவிளை: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழாவில், தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நேற்று முன்தினம் துவங்கிது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி பரணி தூக்கத்திருவிழா கடந்த மூன்றாம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் விழாவில் காலை தூக்க நேர்ச்சை பெயர் பதிவு செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. இதில், 1663 குழந்தைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.நான்காம் நாளான நேற்று முன்தினம் காலை தூக்கம் எழுதி நிறுத்தல், தூக்க நேர்ச்சையில் பங்கேற்கும் நேர்ச்சை குழந்தைகள் மற்றும் தூக்கக்காரர்கள் வரிசைப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு தூக்கக்காரர்கள் நீராடி விட்டு பிரதான கோயிலுக்குச் சென்று, விநாயகருக்கு தேங்காய் உடைத்து, வெங்கஞ்சி கோயிலில் நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து, ஐந்து நாட்கள் தூக்கக்காரர்கள் காலை ஆறு மணி, மாலை ஐந்தரை மணி ஆகிய இரு வேளைகளில் தினமும் நமஸ்காரம் செய்கிறார்கள். ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் நாள் விழாக்களில் காலை சமய சொற்பொழிவு, மாலை பஜனை, மகளிர் மற்றும் பண்பாட்டு மாநாடு நடக்கிறது.ஒன்பதாம் நாள் விழாவில் மாலை ஆறு மணிக்கு வண்டியோட்டம் நடக்கிறது. பிற்பகல் மூன்று மணிக்கு, தூக்கக்காரர்கள் பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கலச பூஜைக்குப் பின், பூரண கும்பத்துடன் கோயிலை வந்தடைகிறார்கள். பத்தாம் நாள் விழாவில் அதிகாலை நான்கு மணிக்கு தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், காலை ஐந்து மணிக்கு அம்மன் பச்சைப்பந்தலில் எழுந்தருளல், ஆறு மணி முதல் பக்தி பரவசமூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை நடக்கிறது.