பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 31ம் தேதி ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அம்மன் திருவீதியுலா வருதால் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று(8ம் தேதி) தேர்த்திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு அம்மனுக்கு ராஜ அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 3 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
கலெக்டர் மனோகரன் தேரை வடம் தொட்டு துவக்கி வைக்க, "அம்மா தாயே முத்துமாரி என்ற சரணகோஷத்தை உச்சரித்தவாறு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிலை சுற்றி திரண்டுநின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே ஆடி அசைந்தவாறு திருத்தேர் வலம் வந்தது. மஞ்சள் பட்டுடன் ராஜ அலஙகாரத்தில் அம்மன் தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சரியாக 4.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு நார்த்தாமலை மட்டுமின்றி புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பல பகுதிகள் நேற்று அதிகாலை முதலே விழாக்கோலம் பூண்டிருந்தது.
புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டான்ட், பழைய பஸ் ஸ்டான்ட், திலகர்திடல், திருக்கோகர்ணம், திருவப்பூர், மச்சுவாடி, பிருந்தாவனம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ரோட்டரி சங்கம், ஜேசீஸ், வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ மற்றும் ஆன்மீக அமைப்புகளின் சார்பில் பந்தல் போடப்பட்டு பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், மோர், சர்பத், பானகம் போன்றவை வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலகுகள் குத்தியும், காவடி எடுத்தும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நார்த்தாமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. எஸ்.பி., தமிழ்ச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பங்குனித்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று(9ம் தேதி) பகல் 1.30 மணிக்கு ஆகாச ஊரணியில் அம்மனுக்கு தீர்த்தாவாரி நடக்கிறது. இதையடுத்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.