தென்காசி: ராதாபுரம் சிவன் கோயிலில் வரும் 15ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. ராதாபுரத்தில் மிகப்பழம்பெருமை வாய்ந்த வரகுணபாண்டீசுவரர் - நித்யகல்யாணி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 25ம்தேதி முடிய 11நாட்கள் திருவிழா நடக்கிறது. தினசரி காலை பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், பகலில் கும்பாபிஷேகமும், இரவு சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. ஏழாம் திருவிழா அன்று இரவு நடராஜர் ஏக சிம்மாசனத்தில் வீதி உலாவும், எட்டாம் திருவிழா அன்று காலை நடராஜர் வெள்ளைச்சாத்தியும் மாலை நடராஜர் பச்சை சாத்தியும் நடக்கிறது. வரும் 23ம்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் இழுக்கின்றனர். 25ம்தேதி நடக்கவுள்ள 11ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் தனலட்சுமி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.