பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலையில் நடக்கவுள்ள காவடி பெருவிழாவுக்காக, முருகன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் "பழநி என்றழைக்கப்படும், அன்னமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி காவடி பெருவிழா நடக்கிறது. இதற்கு, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலத்தில் இருந்தும், முருக பக்தர்கள் காவடி ஏந்தி வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். நடப்பாண்டின் 24ம் ஆண்டு காவடி பெருவிழா 14ம் தேதி நடக்கிறது. விழாவுக்காக, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோவில் பொலிவுப் படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 13ம் தேதி மாலை 6:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை வாஸ்து வழிபாடு, கொடியேற்றம், காப்பு கட்டுதல், மகா பூர்ண தீபாராதனை நடக்கிறது. அன்றிரவு வான வேடிக்கை, பிரந்தாவனம் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி அதிகாலை 4:30 மணி முதல், 7:30 மணி வரை மகா யாகம், காமாட்சிபுரி ஆதீனத்தின், வேள்வி பூஜை குழுவினர்கள் தலைமையில் சிறப்பாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, காவடி ஊர்வலம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக சார்பில் கோவை, காரமடை, ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரியிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடுகிறது.