பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
11:04
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பத்தர்கள், வெயிலின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நடை பாதையில், தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் இக்கோவிலில், திருப்பணி செய்து ஏகாம்பரநாதரை வழிபட்டுள்ளனர். இதன் முகப்பில், பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோபுரத்தின் முகப்பில் இருந்து, கோவில் கருவறை வரையில் திறந்தவெளியாக உள்ளது. இதனால், சூரிய வெளிச்சம் நேரடியாக தரையில் விழுகிறது. பள்ளி கோடை விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. கோவிலுக்கு வருவோர், காலை 11:00 மணிக்கு மேல் வருகின்றனர். அந்த நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், கோவில் முகப்பில் இருந்து கருவறை மண்டபம் வரை தரையில் சூடு அதிகமாக இருப்பதால், பக்தர்கள், வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இதை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில், தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், குடிநீர் வசதியும் தாராளமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறுகையில், ""பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக மேற்கூரை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, தெரிவித்தார்.