பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
05:04
குழந்தாய் முத்துசுவாமி ... வாயைத் திற! திருத்தணிகை முருகன் திருக்கோயில் சந்நிதியில் நாற்பது நாட்களtக அறுமுகப்பரமனின் ஆறெழுத்து மந்திர நாம ஜபத்தில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்த இளைஞர் முத்துசுவாமிக்கு இந்தக் குரலைக் கேட்டதும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது உடல் சிலிர்த்தது. நாமோ இந்த ஊருக்குப் புதியவன்; இங்கு நமக்குத் யாரும் தெரிந்தவர்கள் இல்லை; இந்த நிலையில் நம்முடைய பெயரைச் சொல்லி ஒருவர் அழைக்கிறாரே..?! என்று யோசித்தவாறே, அந்தக் குரலின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத் தன் வாயைத் திறந்தார். எதிரில் இருந்த பெரியவர் அவரது வாயில் ஏதோ ஒரு பொருளை இட்டார்.
முத்துசுவாமி! இது என்ன வென்று தெரிகிறதா? தெரிகிறது சுவாமி, இது கற்கண்டு ! என்று சொல்லிக் கொண்டே கண்களைத் திறந்த முத்துசுவாமிக்கு எதிரில் பேசியவரைக் காண முடிய வில்லை ஆள் மாயமாக மறைந்தார். அக்கணமே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வேழ மங்கை, வேட மங்கை சமேதராக வேல்முருகன் மயில் வாகனத்தில் அருட்காட்சி தந்தார். அந்தப் பரவசத்தில், இந்தக் கண்கள் என்னப் புண்ணியம் செய்தனவோ என்றெண்ணி மெய்சிலிர்த்தார் முத்துசுவாமி. ஞான பண்டிதன் அளித்த ஞானப் பிரசாதத்தை உண்ட அவருக்குச் சித்தமெல்லாம் தித்தித்தது. ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவன் தமது உள்ளம் உடல் அனைத்திலும் நிறைந்த பேரானந்தத்தை உணர்ந்தார். இதயக் குகையில் குருவாக அமர்ந்திருக்கும் ஞானச் செவ்வேள் அளித்த கற்கண்டு நாவினில் இனிக்க கண்களில் ஆனந்த அருவி சொரிய கையை உச்சிமேல் குவித்து வணங்கினார். அவரது உள்ளத்தில் இருந்து இசை வெள்ளம் பாய்ந்து வந்தது.
ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி... என்று தொடங்கும் கீர்த்தனை, மாயாமாளவ கௌள என்னும் ராகத்தில் முதல் பாடலாக வெளிவந்தது. தணிகை முருகன் திருவருள் பெற்று சம்ஸ்கிருத மொழியில் தேனினும் இனிய தெய்வீகக் கிருதிகளைப் பொழிந்த இந்த முத்துசுவாமிதான் கர்னாடக சங்கீத இசை மும்மணிகளில் ஒருவராகப் போற்றப்பெறும் முத்துச்சுவாமி தீட்சிதர். குருவடிவாய் வந்து தமது உள்ளத்தில் குடிகொண்ட குகனான முருகப் பெருமானின் அற்புதத்தை வெளிப்படுத்த, அவரின் திருநாமத்தையே தமது கீர்த்தனைகளில் குருகுஹ என்னும் தமது முத்திரையாகப் பதித்துக் கொண்டார். தணிகையில் இவர் பாடியுள்ள எட்டு கீர்த்தனைகளும், வடமொழியில் அமைந்த எட்டு வேற்றுமை உருபுகளைக் கொண்ட அற்புதமானது. 25 வயதில் முருகப் பெருமானின் அருள் பெற்று புகழ் பெறத் துவங்கிய முத்துசுவாமி தீட்சிதரின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுவோமா?
இவரது மூதாதையர், தற்போதைய வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்கள். இவரது தகப்பனார் ராமசாமி தீட்சிதர், கர்னாடக இசைக்கு இலக்கணம் வகுத்த வேங்கடமஹி என்பவரது பரம்பரையில் வந்த மகா வித்வான் வேங்கட வைத்யநாத தீட்சிதரிடம் இசைக் கலையின் நுணுக்கங்களைத் திறம்படப் பயின்றவர். திருவாரூரில் குடியேறிய ராமசாமி தீட்சிதர், அங்கு மிகச் சிறந்த சங்கீத வித்வானாக விளங்கியதுடன் , பல அரிய கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார்.(பிற்காலத்தில் முத்துச்சுவாமி தீட்சிதர் பாடிப் புகழ் பெற்று வாதாபி கணபதிம் பஜேகம் என்ற கீர்த்தனை அமைந்துள்ள ஹம்சத்வனி என்ற ராகம் , ராமசாமிதீட்சித்தரின் கண்டு படிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.) 40 வயது வரை ராமசாமி தீட்சிதருக்குப் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை தன் மனைவி சுப்பம்மாளுடன் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று அங்கே அருளும் ஸ்ரீ பாலாம்பிகையை இடைவிடாமல் பூஜித்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் அவரது கனவில் வந்த அம்பிகை முத்துமாலை ஒன்றை அளித்தாள். கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்தெழுந்த தீட்சிதர், தாம் கண்ட கனவை தன் மனைவியிடம் தெரிவித்தார். அந்த அம்மையாரும் தமது மடியில் வெற்றிலை பழம் மஞ்சள் முதலானவற்றை அம்பிகை அளித்தது பற்றிச் சொன்னார். இருவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
இந்த அற்புதம் நிகழ்ந்த அடுத்த ஆண்டே, இந்தத் தம்பதியருக்கு பங்குனி மாதம் கிருத்திகை நன்னாளில் (1775ல்) திருவாரூரில் பிறந்தார் முத்துசுவாமி தீட்சிதர். ராமசாமி தீட்சிதருக்கு அம்பிகை அளித்த முத்துமாலை காரணமாகவும். அந்தத் தலத்தில் அருளும் முத்துக்குமார சுவாமியின் நினைவாகவும் இவரது பெயர் முத்துசுவாமி என்று அமைந்தது, முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய பஜரே சித்த பாலாம்பிகாம்.. என்று துவங்கும் கீர்த்தனையில் இந்தக் கனவு நிகழ்ச்சி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தாய் பாலாம்பிக்கை பாவ ராக, தாள லட்சணங்களுடன் சங்கீதத்துக்கு வசப் படுபவள். அவள் பக்தர்களின் பிரார்த்தனைக்கு. மனம் இரங்கி வேண்டும் வரங்களை அளிப்பவள் , அவளே குருகுஹனில் ரூபமாகிய முத்துக் குமாரனின் தாய் என்று பாடியுள்ளார் முத்துசுவாமி தீட்சிதர். ராமசாமி தீட்சிதரின் தூய்மையான பக்தி இசையில் மகிழ்ந்து, அவரது மனக்குறையை நீக்கும் பொருட்டு அவருக்குத் தமது குமாரனையே புத்திரச் செல்வமாக அளித்தார் என்ற பொருள் இந்த அடிகளில் பொதிந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார் பிரபல இசைமேதை டி. எல் . வெங்கட்ராமய்யர்.
இளமையில் முத்துசுவாமி தீட்சிதர் வேத சாஸ்திரம் இலக்கணம், இசை ஆகியவற்றுடன் சம்ஸ்கிருத மொழியிலும் மிகச் சிறந்த புலமை பெற்றார். கானம் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் தன்னிகரற்று விளங்கினார். ஒரு முறை சென்னைக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊரில் வசித்த சின்னய்யா முதலியார் என்ற செல்வந்தர் திருவாரூரில் ராமசாமி தீட்சிதரைச் சந்தித்தார். அவரை தமது ஊரான மணலிக்கு அழைத்துச் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து ஆதரவு அளித்தார். அவ்வாறு மணலியில் வாழ்ந்து வரும் நாளில் ராமசாமி தீட்சிதரின் உபதேச குருவான சிதம்பரநாத சுவாமிகள் என்பவர் ஒருநாள் அவரது இல்லத்துக்கு வந்தார். இளைஞன் முத்துசுவாமியின் இசைத் திறமையைக் கண்ட சுவாமிகள் அவரைத் தம்முடன் காசிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வேண்டினார். ராமசாமி தீட்சிதர் தம்பதியர் அதற்கு இசைவு தெரிவிக்க, சிதம்பரநாத சுவாமிகளுடன் காசிக்குப் பயணமானார் முத்துசுவாமி. வாரணாசி எனும் காசி மாநகரில், முத்துசுவாமிக்கு அம்பிக்கை வழிபாட்டின் ஸ்ரீவித்யா தத்துவம், ரகசியம் மற்றும் மந்திர சாஸ்திரங்களை உபதேசித்தார் சிதம்பரநாத சுவாமிகள். முத்துசுவாமிக்கு மந்திர பலம் முழுமையாகக் கிடைத்த பிறகு அவரை அழைத்த சுவாமிகள், உனக்கு மந்திர ஸித்தி வந்துவிட்டது. கங்கை நதியில் நின்றுகொண்டு இரு கைகளாலும் கங்கை நீரை அள்ளி எடுத்தால் நினைத்தது நிறைவேறும் என்று ஆசி வழங்கினார். அதன்படி முத்துசுவாமியும் கையில் இருக்கும் வீணையைத் தன் மனத்தில் நினைத்துக் கொண்டு புனித கங்கை நீரை இரு கைகளிலும் எடுத்தார். என்ன ஆச்சரியம் ... அக்கணமே அவரது கரங்களில் ஓர் அற்புதமான வீணை தவழ்ந்தது. அந்த வீணையின் யாளி முகம் மற்ற வீணைகளில் உள்ளது போல் இல்லாமல் , எதிர்முகமாக அமைந்திருப்பதும் வியப்பாக இருந்தது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு முத்து சுவாமியை அழைத்த சிதம்பரநாத சுவாமிகள் திருத்தணிகை முருகன் சந்நிதியில் ஒரு மண்டலம் முருகனை உபாசனை செய். உனக்குத் தணிகை நாயகன் தண்ணருள் சுரக்கும் என்று ஆசி கூறினார். இதைத் தொடர்ந்து காசியிலிருந்து புறப்பட்டு தணிகை வந்தடைந்தார் முத்துசுவாமி. அப்போது தான், குழந்தாய் முத்துசுவாமி... வாயைத் திற! என்று கூறி அவருக்கு அருள்புரிந்தார் கந்தவேள். இப்படி தணிகைநாயகனின் பேரருள் பெற்ற முத்துசுவாமி தீட்சிதர், பல திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இறைவனையும் அம்பிகையையும் பாடி மகிழ்ந்தார். காஞ்சிபுரம் திருப்பதி ,ஸ்ரீகாளஹஸ்தி, விரிஞ்சிபுரம் , திருவொற்றியூர் ,சிதம்பரம் , மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்ப கோணம், ஸ்ரீவாஞ்சியம் , திருவாரூர் , சுவாமிமலை, திருவையாறு , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மன்னர்குடி, வேதாரண்யம், திருவானைக்கா, மதுரை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் முதலான 63 தலங்களைத் தரிசித்து இறையருள் பெற்று , பல இன்னிசைக் கீர்த்தனங்களைப் பாடினார். வட இந்தியாவில் காஷ்மீர், காசி, இந்திர நீலக்கிரி மற்றும் நேபாளத்தில் பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களின் இறைவனையும் இவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிவற்றில் இன்று நமக்குக் கிடைத்துள்ள கீர்த்தனைகள் 479 (சில பதிப்புகள் 472) என அறியமுடிகிறது. ஒவ்வொரு தலப்பாடலிலும் மூர்த்தி , தலம், தீர்த்தம் என்ற முறையில் அதன் அனைத்துச் செய்திகளையும் அற்புதமாகப் புதிவு செய்துள்ளார். திருவாரூரை அடுத்த கீழ்வேளுர் அட்சயலிங்க ஸ்வாமி கோயிலில் சங்கராபரண ராகத்தில் கீர்த்தனை பாடிய போது தாளிட்ட கதவை இறைவனே திறந்து காட்சியளித்தது, எட்டாயபுரம் அருகே ஒரு முறை மழையில்லாது நீர்நிலைகள் வறண்டு மக்கள் வருந்திய காலத்தில், அம்ருதவர்ஷினி எனும் ராகத்தில் கீர்த்தனை பாடி மழை பொழிய வைத்தது முதலான அற்புதங்கள் முத்துசுவாமி தீட்சிதரின் அருள்வாழ்வில் நிகழ்ந்தவை. இவரது காலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் மற்றும் நாகரிகம் நம் நாட்டில் பரவியதால் மேல்நாட்டு இசை,நம் இசையோடு கலக்க ஆரம்பித்தது. அதன் தாக்கமாக, இங்கிலீஷ் நோட் ஸ்வரங்களைக் கொண்ட 37 பாடல்களை சங்கராபரண ராகத்தில் மேல்நாட்டு வர்ணமெட்டில் அமைத்து இவர் செய்துள்ளது மிகப் புதுமையாகும். தணிகை முருகன் திருவருள் பெற்று தலம்தோறும் இசைபாடிய முத்துசுவாமி தீட்சிதர், 1835 ஆம் ஆண்டில் தீபாவளியன்று முருகன் திருவருளில் கலந்தார்.
கற்கண்டைப் போல் பக்தியில் கரைந்த உள்ளத்தில் இருந்து இனிக்க இனிக்க இசை பாடிய முத்துசுவாமி தீட்சிதரின் கீர்த்தனைகள் இசை உலகத்தின் அற்புதச் சொத்து! அது அனைவரது நெஞ்சிலும் தேவாமிர்தமாக நிலைத்து தெய்வாம்சமான அந்த மகானின் ஞான அமிர்தமான கானப்புனலில் திளைக்கச் செய்து வரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
திருத்தணிகை மலையேறித் தரிசிக்க முனைவேன்
விருத்தனென் எதிர்வந்தார் வாய்திறந்து இனிப்பனிக்க
குருவருளும் குகனருளும் கூடி இசைக் கவிபொழிய
திருவாரூர் முத்துசுவாமி தொழுத குகன்பதம் போற்றி!