மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே சப்த குரு ஸ்தலமான உத்தமர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்றுமுன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகவும், 108 வைணவ ஸ்தலங்களுள் ஒன்றானதாகவும், மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்கக் கூடியது திருச்சி அருகே உள்ள உத்தமர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூர்ண வள்ளி தாயார் உடனுறை புருஷோத்தம பெருமாளுக்கு தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் புருஷோத்தம பெருமாள் உபயநாச்சியாருடன் சூரிய பிரபை, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 25ம் தேதி மிதுன லக்னத்தில் 11.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது.