கும்பகோணம்: சுவாமிமலையில் வருகிற 25ம்தேதி சித்திரைமாத பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் முருகனின் நான்காவது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இத்தலத்தில் பவுர்ணமி கிரிவலம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.அதன்படி, சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் வரும் 25ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. மாலை 6.30 மணிக்கு வல்லபகணபதி சன்னதியிலிருந்து புறப்படும் கிரிவலத்தை திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன் சுவாமிமலை கிரிவல கமிட்டியினரால் நடத்தப்படும் கூட்டுவழிபாடு மற்றும் கிரிவலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிரிவல கமிட்டி தலைவர் கேசவராஜன், செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் சேகர், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், செய்தி தொடர்பாளர் சுவாமிநாதன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.