வேலாயுதம்பாளையம்: நாணப்பரப்பு மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற நாணப்பரப்பு மகா மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு விழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 17ம் தேதி கம்பம் நடுதல், 21ம் தேதி வடிசோறு மற்றும் பால்காவடி அபிஷேகம், இளநீர் அபிஷேகம் ஆகியவை நடந்தது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் புகளூர் மற்றும் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வந்து தொடர்ந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் 12 மணிக்கு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், குழந்தைகள், முதியோர்கள் என ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, வழிப்பாடு செய்த பின் பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்தனர். விழாவையொட்டி நீர்மோர், கம்மங்கூல் பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 18 கிராம மக்கள் விழாவில் பங்கேற்றனர்.