பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வைகை ஆற்றில் குழுமி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என முழக்கமிட்டு கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடத்தினர்.
எதிர் சேவை: மதுரை வந்த கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற பக்தர்கள் பொரி கடலை, சர்க்கரை படைத்து நிவேத்தியம் செய்தனர். அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் நேற்று முன்தினம் மாலை கோயிலில் இருந்து அழகர் புறப்பட்டார். பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளிய அவர், நேற்று காலை மதுரை வந்தார். மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் பட்டு துணி விரித்து வணங்கி எதிர்சேவை செய்தனர். புதூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை படைத்தனர். ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மாலை 6 மணிக்கு அவுட்போஸ்ட்டில் எழுந்தருளினார். அவரை பக்தர்கள் ""கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர். வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய அவர், இரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் சென்றார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சணம், தீபாராதனை நடந்தது.