சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில், நேற்று காலையில் சேஷ வாகனம் மற்றும் இரவில், சிம்ம வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் பார்த்தசாரதி சுவாமி வீதியுலா நடைபெற்றது. இந்த வாகனம், 1900ம் ஆண்டில் செய்யப்பட்டது. வெள்ளி கவசம் பொருத்தப்பட்ட இந்த சேஷ வாகனத்திற்கு, ஒன்பது தலைகள் உள்ளன. கீழே மூன்று வட்டங்களாக நாகத்தின் உடல் சுற்றியிருக்கும். அதேபோல, நேற்று இரவில் தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள் முன்பு, பிரபந்தம் விண்ணப்பிக்கப்பட்டது.