பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில்,சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்ட விழா நடந்தது. பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள கரிவரதராஜா பெருமாள் கோவிலில், இந்தாண்டுக்கான 37வது ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த 16ம் தேதி விச்வக்ஷேனாராதனம், வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி பகல் 12.00 மணிக்கு விழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, தினமும் மாலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் பெருமாள் பல்வேறு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கடந்த 23ம் தேதி மாலை பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் (25ம் தேதி) இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரங்கரிக்கப்பட்ட ஒன்பது அடி உயரமுள்ள தேரில், ஸ்ரீதேவி, பூதேவி தம்பதி சமேததரராய் பெருமாள் எழுந்தருளினார். கோவிலிருந்து துவங்கிய தேரோட்டம், கடைவீதி, சத்திரம் வீதி, கோவை ரோடு, பாலகோபாலபுரம் வீதி, பல்லடம் ரோடு, பவானி சங்கர் வீதி, உடுமலை ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. நேற்று (26ம் தேதி) காலை 6.00 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பகல் 3.30 மணிக்கு துவாதச ஆராதனம் கண்டருலுதல் நடந்தது. மாலை 6.00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இன்று (27ம் தேதி) காலை 7.00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் பிரம்மோத்ஸவ விழா நிறைவடைகிறது. விழாவில், கோவில் செயல் அலுவலர் வெண்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.