பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 23ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதனையடுத்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்தும், கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். விழாவையொட்டி, தினசரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 12.00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் இடம்பெற்றன. கொடியேற்றம் மற்றும் பூவோடு துவக்க விழா நிகழ்ச்சியும், ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும்; கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. பின், கம்பத்தில் மஞ்சள் துணியில் சிம்ம வாகனத்தில் அம்மன் காட்சி அளிப்பது போல உருவம் வரையப்பட்ட கொடி மதியம் 1:00 மணிக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேருக்கு முகூர்த்த கால் பூஜைகள் நடத்தப்பட்டு, தேர் பணிகள் துவங்கின. மதியம் 2:00 மணிக்கு "பூவோடு துவக்க விழா நடைபெற்றது;பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை தரிசித்தனர். நேற்று முதல், மாலையில், அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. முதல் நாளான நேற்று காமதேனு வாகனத்தில், அம்மன் புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். குட்டைத்திடலில், இரவு 10:00 மணிக்கு சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் கவுதமன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.