ஒரு காலத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் தீராத சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் இருதரப்பிலும் எண்ணற்ற உயிர்சேதம் ஏற்பட்டது. இதனால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற யோசனையை பிரமனிடம் கூறினர். பிரமன் திருமாலிடம் கூற அவரது துணையுடன் பாற்கடலைக் கடைந்தனர். இருதரப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மந்திரமலை ஆடியது. இதனால் திருமால் மலையின் அடியில் சென்று ஆமையாகி மலையைத் தாங்கினார். இதனால் விஷம் வந்து, அதை சிவபெருமான் உண்டது வரை அனைவரும் அறிந்ததே. விஷம் வரக்காரணம் சிவனை வணங்காதது என்று உணர்ந்தோர் அவரை வணங்கினார். இவனது ஆசியுடன் அமுதம் கடைய சென்றனர். இப்பொழுதும் ஆமை வடிவம் தாங்கிய சிவபெருமான் மலையைத் தாங்கினார். அமிர்தமும் வந்தது. அதனைத் தொடர்ந்து பல அறிய பொருட்களும் வெளிவந்தது. அமிர்தத்தை தேவர்கள் மட்டும் அடையும் நேரத்தில் திருமால் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தம் உண்டனர். இவ்விசயத்தை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொன்னார்கள். திருமால் மிக்கக் கோபத்துடன் கையில் இருந்த அகப்பையால் அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல், சிவபூஜை செய்து ராகு, கேது கிரகங்களாக உருமாறி இன்றளவும் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பிடித்து வாட்டுகின்றனர். இதனிடையே மந்திமலையைத் தாங்கியபடி நின்ற (திருமால்) ஆமை ஏழு சாகரங்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்து சேற்றையும் உண்டது. ஆமை அனைத்தையும் உண்டது. இதனால் சந்திர, சூரியர் கடலில் சென்று மறைய பயந்து வேறொங்கோ ஒளிந்துக்கொண்டனர், இருளின் பிடியில் உலகம் அமிழ்ந்தது, இதனால் உலகமாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர். ஆமையை அழிக்குமாறு கூறினார். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் அவ்வாமையின் உடலைக்குத்தி அதன் இறைச்சியை வழித் தெடுத்தார். பெருமானே அதன் ஓட்டை ஆபரணமாக்க வேண்டுமெனத் தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பப்படி தன் திருமார்பில் இருந்த பிரமனின் தலைமாலையின் நடுவே யொருத்தி இணைந்தார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். திருமாலாகிய ஆமையைக் கொன்றதால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
சென்னையிலுள்ள பாரிமுனைக்கருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது வரை ஓவியம் காணப்படுகின்றது. அங்கு சிவமூர்த்திகளின் ஓவியம் நிறையக் காணப்படுகின்றது. இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்களன்றுக் கொடுக்க நீர் கண்டம் மறையும் பயம் விலகும். தம்பதியர் ஒற்றுமைப் பெருகும்.