பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை ஏலம் விட்டதில், 107 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது என, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, நேற்று முன்தினம் இரவு, தெரிவித்தார். திருமலை - திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம். கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில், 130 கோடி ரூபாய் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, நடைபெற்ற ஏலத்தில், தேவஸ்தானத்திற்கு, 107 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தலைமுடியின் அளவுக்கு ஏற்ப, ரகம் பிரித்து நடத்தப்பட்ட ஏலம் விவரம் வருமாறு:
முதல் ரகம்: 31 அங்குல நீளம்; 1,386 கிலோ. தேவஸ்தானம் நிர்ணயித்த குறைந்தபட்ச விலை, கிலோ, 20,715 ரூபாய். ஏலம் மூலம் கிடைத்த தொகை, 3 கோடி ரூபாய். டூ இரண்டாவது ரகம்: 16 முதல், 30 அங்குலம் வரை நீளம்; 61,775 கிலோ. குறைந்தபட்ச விலை, கிலோ, 18,650 ரூபாய். 50,700 கிலோ ஏலம் போனது. கிடைத்த தொகை, 94.58 கோடி ரூபாய். மூன்றாவது ரகம்: 10 முதல், 15 அங்குல நீளம்; 58,688 கிலோ. இதில், 11,000 கிலோ மட்டும் ஏலம் போனது. கிடைத்த தொகை, 8.20 கோடி ரூபாய். நான்காவது ரகம்: 5 முதல், 9 அங்குல நீளம்; 1,674 கிலோ. ஏலம் மூலம், கிடைத்த தொகை, 91 லட்சம் ரூபாய். ஐந்தாம் ரகம்: 5 அங்குல நீளத்திற்கும் குறைவு; 2,64,239 கிலோ; யாரும் ஏலம் எடுக்கவில்லை.
வெள்ளை தலைமுடி: 1,233 கிலோ. ஏலம் மூலம் கிடைத்த தொகை, 28 லட்சம் ரூபாய். அனைத்து ரகத்தையும் சேர்த்து, 65,600 கிலோ தலைமுடி, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதில், மொத்தம், 107 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஐந்தாம் ரக தலைமுடியை, எந்த வியாபாரியும் ஏலம் எடுக்காத காரணத்தை தீர விசாரித்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,தேவஸ்தான செயல் அதிகாரி சுப்ரமணியத்திடம், மற்ற அதிகாரிகள் கூறினர்.