பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில், வைகாசி பெருவிழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. இந்த கோவிலில், கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, கைலாய வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், உற்சவருக்கு மகா அபிஷேகம், அலங்காரத்தைத் தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி, காலை, 8:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் ஏறினார். பின், யாத்ரா தானம் முடிந்து, சக்கரத்திற்கு குண்டலி பூஜையைத் தொடர்ந்து, தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து, ராஜ வீதிகள் வழியே, தேரை இழுத்து வந்தனர். பகல், 12:30 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தது. பத்தாம் நாளான இன்று காலை, 9:00 மணிக்கு, நடராஜர் தரிசனம் மற்றும் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.